தமிழ் சினிமா

'ஆட்டோகிராஃப்' Vs 'பிரேமம்' ஒப்பீட்டுக் கவலை: அல்போன்ஸ் புத்திரன்

செய்திப்பிரிவு

'ஆட்டோகிராஃப்' படத்தோடு 'பிரேமம்' படத்தை ஒப்பிடுவார்கள் என்ற கவலை இருந்ததா என்ற கேள்விக்கு அல்போன்ஸ் புத்திரன் பதிலளித்துள்ளார்.

2015-ம் ஆண்டு மே 29-ம் தேதி அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளியான மலையாளப் படம் 'பிரேமம்'. நிவின் பாலி, மடோனா செபாஸ்டியன், சாய் பல்லவி, அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்ட பலர் நடித்த இந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. சென்னையில் இந்தப் படம் 100 நாட்களைக் கடந்து திரையிடப்பட்டு மாபெரும் வெற்றி பெற்றது.

அதே நேரத்தில், தமிழகத்தில் பலரும் இந்தப் படத்தை சேரன் இயக்கத்தில் வெளியான 'ஆட்டோகிராஃப்' படத்துடன் ஒப்பிட்டார்கள். இந்த ஒப்பீட்டுக்கு அல்போன்ஸ் புத்திரன் பதிலளிக்காமல் இருந்தார். நேற்று (மே 29) 'பிரேமம்' வெளியாகி 5 ஆண்டுகள் நிறைவடைந்தன. இதனை சமூக வலைதளத்தில் ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தார்கள். இந்தத் தருணத்தில் தனியார் யூடியூப் சேனலுக்கு அல்போன்ஸ் புத்திரன் பேட்டி அளித்துள்ளார்.

அதில் " 'ஆட்டோகிராஃப்' படத்தோடு 'பிரேமம்' படத்தை ஒப்பிடுவார்கள் என்று கவலை இருந்ததா?" என்ற கேள்விக்கு அல்போன்ஸ் புத்திரன் கூறியிருப்பதாவது:

"ஆம், நிறைய கவலை இருந்தது. அதனால்தான் ட்ரெய்லரை வெளியிடாமல் இருந்தேன். வெளியிட்டிருந்தால் உடனே 'ஆட்டோகிராஃப்' படத்தோடு ஒப்பிட்டிருப்பார்கள். மக்கள் படம் பார்க்க வந்திருக்க மாட்டார்கள். அதனால் இரண்டு பாடல்களை மட்டுமே வெளியிட்டேன். மக்களுக்குப் படம் பிடித்துப்போனது. படம் பார்த்து சேரன் சார் என்னை அழைத்தார். அவருக்கும் படம் பிடித்திருந்தது.

'ஆட்டோகிராஃப்' ஒருவரின் வாழ்க்கைக் கதையைச் சொல்வதுபோல, 'பிரேமம்' படத்தின் தலைப்பைப் போல, காதலைப் பற்றி மட்டுமே".

இவ்வாறு அல்போன்ஸ் புத்திரன் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT