கரோனா அச்சுறுத்தல் முடிந்தவுடன் செய்ய விரும்புவது என்ன என்ற கேள்விக்கு சூர்யா - ஜோதிகா தம்பதியினர் பதிலளித்துள்ளனர்.
ஜே.ஜே.பிரட்ரிக் இயக்கத்தில் ஜோதிகா, பாக்யராஜ், பார்த்திபன், பாண்டியராஜன், தியாகராஜன், பிரதாப் போத்தன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'பொன்மகள் வந்தாள்'. 2டி நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் இந்தியத் திரையுலகில் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள முதல் படமாக அமைந்துள்ளது.
'பொன்மகள் வந்தாள்' படம் குறித்த விமர்சனங்கள் மற்றும் ஜோதிகாவின் நடிப்பு உள்ளிட்டவை குறித்து பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இந்தப் படத்தை விளம்பரப்படுத்த சூர்யா - ஜோதிகா இணைந்து பேட்டியொன்று அளித்துள்ளார்கள்.
அதில் "சகஜநிலை திரும்பியவுடன் என்ன செய்ய விரும்புகிறீர்கள்?" என்று சூர்யா - ஜோதிகா இணையிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ஜோதிகா, "உணவகங்களுக்குச் சென்று காரசாரமாக உணவு சாப்பிடக் காத்திருக்கிறேன். சாலையில் நடமாட வேண்டும். என் குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல ஆர்வமாக இருக்கிறார்கள்" என்று பதிலளித்தார்.
ஜோதிகாவைத் தொடர்ந்து சூர்யா, "இந்த வாழ்க்கை முறைக்குப் பழகிவிட்டோம். மீண்டும் கேமராவின் முன்பு நிற்க முடியுமா என்று தெரியவில்லை" என்றார்.