தமிழ் சினிமா

நீதி தேவதைக்‌ கூட ஓரக்கண்ணால்‌ உங்கள்‌ நடிப்பை மட்டுமே ரசிக்கிறாள்‌: ஜோதிகாவுக்கு பார்த்திபன் பாராட்டு

செய்திப்பிரிவு

நீதி தேவதைக்‌ கூட ஓரக்கண்ணால்‌ உங்கள்‌ நடிப்பை மட்டுமே ரசிக்கிறாள் என்று ஜோதிகாவுக்கு பார்த்திபன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

ஜே.ஜே.பிரட்ரிக் இயக்கத்தில் ஜோதிகா, பாக்யராஜ், பார்த்திபன், பாண்டியராஜன், தியாகராஜன், பிரதாப் போத்தன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'பொன்மகள் வந்தாள்'. 2டி நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் இந்தியத் திரையுலகில் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள முதல் படமாக அமைந்துள்ளது.

'பொன்மகள் வந்தாள்' படம் குறித்த விமர்சனங்கள் மற்றும் ஜோதிகாவின் நடிப்பு உள்ளிட்டவை குறித்து பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இதனிடையே 'பொன்மகள் வந்தாள்' படத்தில் ஜோதிகாவுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பார்த்திபன் கடிதமொன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் பார்த்திபன் கூறியிருப்பதாவது

"நீர்‌... பாத்திரத்துடன்‌ ஒன்றி அப்பாத்திரத்தின்‌ வடிவத்தை அடைவதைப்‌ போல்‌...

நீர்‌ இப்படத்தில்‌ பாத்திரமாகவே அதுவும்‌ பத்திரமாகவே (கொஞ்சம்‌ நழுவினாலும்‌ உடையக்‌கூடிய கண்ணாடிப்‌ பாத்திரம்‌). Reality show-வில் பாதிக்கப்பட்ட பெண்ணையே அழைத்து வந்து அவர்‌ வலியிலிருந்து வலிமைக்குள்‌ நுழைந்த பகீரத தருணங்களை விளக்கும்‌ போது, இனம்‌ புரியாத விசும்பல்‌ நமக்குள்‌ வெடிக்கும்‌. அப்படி படம்‌ நெடுக! தன்‌ அகன்ற விழிகளால்‌ ஆடியன்ஸை ஆக்கிரமிக்கும்‌ அக்கிரமம்‌. அதுவும்‌ Maximum சின்ன முள்‌, பெரிய முள்‌ மற்றும்‌ நடு முள்‌ இத்தனை முட்களுக்கு நடுவே தான்‌ நேரம்‌ பூப்‌ பூவாய்‌ வாசம்‌ வீசுவதை போல... மிக சாதூர்யமாக, சாத்வீகமாக, சவாலான ஒரு கேஸை Lawவகமாகக்‌ கையாண்டு... கண்ணீர்‌ ஆறுகளுக்கு நடுவே பன்னீர்‌ புஷ்பம்‌ பூப்பதைப்‌ போல உங்கள்‌ கன்னக்குழியினில்‌ ஒரு மெளனப்‌ புன்னகை.

அசோக PILLAR மீது 4,5 சிங்கங்கள்‌ போல படத்தில்‌ சிலர்‌ நடித்‌-இருந்தாலும்‌ நீங்கள்‌ மட்டுமே அந்த PILLAR.. தில்'லர்‌!'

அந்த சட்டப்‌ புத்தகத்தில்‌ 1000 பக்கங்கள்‌ இருந்தாலும்‌,

அந்த சட்டமாகவே நீங்கள்தான்‌ இருக்கிறீர்கள்‌.

அந்த சுத்தியல்‌ கூட, உங்கள்‌ உணர்ச்சிக்கு முன்னால்‌ யார்‌ நடித்தாலும்‌ 'SILENCE'

என அதட்டுகிறது.

நீதி தேவதைக்‌ கூட ஓரக்கண்ணால்‌ உங்கள்‌ நடிப்பை மட்டுமே ரசிக்கிறாள்‌. அவளைப்‌ போலவே

நானும்‌ உங்களின்‌ துல்லியமான உணர்ச்சி வெளியீட்டை உணர்ச்சிவசப்பட்டே பார்த்துக்‌ கொண்டடிருந்ததில்‌ நானே என்‌ வசப்படாமல்‌ போனேன்‌-போலானேன்‌. ஏன்‌?

நடிகர்‌ திலகம்‌, நடிகையர்‌ திலகம்‌, நடிப்பின்‌ இலக்கணம்‌ இப்படி இன்னும்‌ சில பல இருப்பினும்‌. அவை அனைத்தையும்‌ உருக்கி ஒரு பொன்‌ கேடயமாக்கி ..கதா பாத்திரமாகவே சதா க்ஷனமும்‌ வாழ்ந்திருக்கும்‌ எங்கள்‌ ஜோ.வுக்கு 'ஜே ஜே' சொல்லி வழங்கலாம்‌.வாழ்த்தலாம்‌ । படத்தை வெளியிட்ட OTT - Amazon ஆக இருக்கலாம்‌,

நடிப்பை வெளியிட்ட Jyotika - Amazing in

Oppatra (ஒப்பற்ற)

Thaniththuvamaana (தனித்துவமான)

Thiramai (திறமை)"

இவ்வாறு பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT