மதம் மாற்றிவிட்டாரா என்று ரசிகர் எழுப்பிய கேள்விக்கு மணிமேகலை மறுப்பு தெரிவித்துள்ளார்.
சன் தொலைக்காட்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி வருபவர் மணிமேகலை. ஹுசைன் என்பவரை நீண்ட காலமாகக் காதலித்து வந்தார். இவர்களுடைய காதலுக்கு குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவிக்கவே, 2017-ம் ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி பதிவுத் திருமணம் செய்து கொண்டனர். திருமணமான புதிதில் இவர்களை வீட்டில் ஏற்றுக் கொள்ளவில்லை.
மணிமேகலையும் அவரது கணவரும் முஸ்லிம் முறைப்படி உடையணிந்து ரமலான் வாழ்த்து தெரிவித்தனர். அதில், "ஈத் முபாரக். முன்னாடி எல்லாம் ரம்ஜானுக்கு என் நண்பர்களிடம் பிரியாணி கேட்பேன். இப்போது என்னிடம் எல்லாரும் பிரியாணி கேட்கிறார்கள். ஒரே நகைச்சுவையாக இருக்கிறது" என்று தனது வாழ்த்தில் குறிப்பிட்டு இருந்தார் மணிமேகலை.
உடனே, மணிமேகலை முஸ்லிம் மதத்துக்கு மாறிவிட்டார் என்று பலரும் நினைத்தனர். அவரது ட்விட்டர் தளத்தைப் பின்தொடரும் ரசிகர், "எப்படியோ ஒரு வழியாக மதம் மாற்றிவிட்டார்" என்று மணிமேகலையிடம் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளிக்கும் விதமாக மணிமேகலை, "ரம்ஜான் வாழ்த்துகள் சொல்வதற்கு மதம் மாறிவிட்டுத் தான் சொல்லணுமா. யாரும் இங்கு மாறவில்லை. ஹுசைன் என்னுடன் கோயிலுக்கு வருவார். நாங்கள் ரம்ஜானும் கொண்டாடுவோம். உங்கள் குழப்பங்களை இங்கு கொண்டுவராதீர்கள் ப்ளீஸ். நன்றி" என்று தெரிவித்துள்ளார்.