பெண்களை மையமாகக் கொண்ட படங்களைத் தயாரிப்பது சிலர் மட்டுமே என்று ஜோதிகா தெரிவித்துள்ளார்.
ஜே.ஜே.பிரட்ரிக் இயக்கத்தில் ஜோதிகா, பாக்யராஜ், பார்த்திபன், பாண்டியராஜன், தியாகராஜன், பிரதாப் போத்தன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'பொன்மகள் வந்தாள்'. 2டி நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் இந்தியத் திரையுலகில் ஓடிடி தளத்தில் வெளியாகும் முதல் படமாக அமைந்துள்ளது. மே 29-ம் தேதி அமேசான் பிரைம் தளத்தில் இந்தப் படம் வெளியாகவுள்ளது.
இந்தப் படத்தை விளம்பரப்படுத்த ஜூம் செயலி மூலமாக பத்திரிகையாளர்களை சந்தித்தார் ஜோதிகா. அந்தச் சந்திப்பில் தொடர்ச்சியாக 2டி நிறுவனத்தின் தயாரிப்பிலேயே நடித்து வருவது குறித்த கேள்விக்கு ஜோதிகா கூறியதாவது:
"எங்களுடைய நிறுவனத்தின் தயாரிப்பில் நடிக்கும்போது வசதியாக இருக்கிறது. வீட்டில் குழந்தைகள் இருக்கிறார்கள். அவர்களையும் கவனித்துக் கொண்டு சினிமாவில் நடிக்க வேண்டும். ஆகையால்தான் 2டி நிறுவனம் எனக்குச் சரியாகப் பொருந்துகிறது. 6 மணிக்கு பேக்-அப் பண்ணிவிட்டு வீட்டுக்கு வந்துவிடுவேன்.
சில படங்களை எந்த அளவுக்கு பொதுமக்கள் வந்து பார்ப்பார்கள் என்பது தெரியாது. ஆகையால் சொந்தப் பணத்தையே போட்டுத் தயாரித்து விடுகிறோம். '36 வயதினிலே' படத்துக்குப் பிறகு நிறைய பெண்களை மையமாகக் கொண்ட படங்கள் வந்தன. அதைத் தயாரிப்பது சில பேர் மட்டுமே. 2டி நிறுவனத்தில் நடிக்கும்போது எனக்கு வசதியாக உள்ளது”.
இவ்வாறு ஜோதிகா தெரிவித்துள்ளார்.
மேலும், 'பொன்மகள் வந்தாள்' படத்தின் போஸ்டர்களில் ஜோதிகா - சூர்யா தயாரிப்பு என்று இருப்பது குறித்து ஜோதிகாவிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளிக்கும் விதமாக 2டி நிறுவனத்தின் ராஜசேகர் பேசும்போது, "சூர்யாதான் அப்படி பண்ணச் சொன்னார். ரொம்ப நாளாகவே யோசித்துக் கொண்டிருந்த விஷயம். இந்தப் படத்தில் போட்டால் அது சரியாக இருக்கும் என்று முடிவு செய்து போட்டுள்ளோம். இனிமேல் வரும் படங்களிலும் அது தொடரும்" என்று தெரிவித்தார்.