தமிழ் சினிமா

14 ஆண்டுகளை நிறைவு செய்யும் 'புதுப்பேட்டை': அச(த்த)லான கேங்க்ஸ்டர் படம் 

எஸ்.கோபாலகிருஷ்ணன்

சில திரைப்படங்கள் வெளியான காலத்தில் மிகப் பெரிய வரவேற்பையும் வெற்றியையும் பெற்று காலப்போக்கில் மறக்கப்பட்டுவிடும். வேறு சில படங்கள் வெளியான காலத்தில் அதிக ரசிகர்களைக் கவரத் தவறினாலும் கால மாற்றத்தில் வயது முதிர்ச்சியையும், ரசனை முதிர்ச்சியையும் பெறும் ரசிகர்களால் மிகச் சிறந்த படைப்பாக நினைவுகூரப்பட்டு முக்கியமான திரைப்படமாக, கல்ட் பட அந்தஸ்தைப் பெற்றுவிடும். இப்படிப்பட்ட படங்களின் பட்டியலில் செல்வராகவன் இயக்கிய ‘புதுப்பேட்டை’ படத்துக்கு மிக முக்கியமான முதன்மையான இடம் உண்டு. இன்றைக்கு 14 ஆண்டுகளுக்கு முன்பு 2006 ஆம் ஆண்டு மே 26 அன்று ரசிகர்களின் மிகப் பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியானது ‘புதுப்பேட்டை’.

உச்சத்தில் இருந்த எதிர்பார்ப்பு

யுவன் ஷங்கர் ராஜா - நா.முத்துக்குமார் இணையின் பாடல்கள் மிகப் பெரிய வெற்றிபெற்றிருந்தன. செல்வராகவனின் முந்தைய இரண்டு படங்களும் மிகப் பெரிய வெற்றியையும் விமர்சகர்களின் பாராட்டையும் பெற்றிருந்தன. ’காதல் கொண்டேன்’ படத்துக்குப் பிறகு அவர் தம்பி தனுஷுடன் இணைந்த படம். தமிழ் சினிமாவில் மிக அரிதாகப் பயன்படுத்தப்பட்ட நிழலுக அரசியலைப் பேசும் கேங்க்ஸ்டர் வகையைச் சேர்ந்த படம். இவையெல்லாம் சேர்ந்து ‘புதுப்பேட்டை’ படம் மீதான எதிர்பார்ப்பை உச்சத்தில் வைத்திருந்தன. கோடை விடுமுறைக் காலம் என்பதால் மாணவர்கள், இளைஞர்கள் தம் நண்பர் படை சூழ திரையரங்குகளை நிறைத்தனர். ஆனால் கதை, திரைக்கதை உருவாக்கம் படம் பேசிய அரசியல் என அனைத்துமே அந்த காலகட்ட ரசிகர்களுக்குப் புதிதாக இருந்தது. அவர்கள் எதிர்பார்த்த ஹீரோயிசம் சார்ந்த சுவாரஸ்யங்கள் குறைவாகவும் யதார்த்தமான காட்சிகள் அதிகமாகவும் இருந்ததால் முதல் பார்வையில் படம் இளைஞர்களைக் கவரவில்லை. காலம் போகப் போக ரசனை மாற்றம் ஏற்பட்ட பிறகுதான் ‘புதுப்பேட்டை’யின் அருமையும் முக்கியத்துவமும் ரசிகர்கள் மட்டுமல்லாமல் விமர்சகர்கள் பலருக்கும் புரியத் தொடங்கியது.

தனித்தன்மை வாய்ந்த கேங்க்ஸ்டர் படம்

தமிழ் சினிமாவில் ‘நாயகன்’, ‘பாட்ஷா’ என சில கேங்ஸ்டர் படங்கள் வந்துள்ளன. ஆனால் ‘புதுப்பேட்டை’ இவற்றிலிருந்து முற்றிலும் வேறுபட்டது,. ஒரு சாமான்ய ஏழைச் சிறுவன் அவன் விரும்பவே இல்லை என்றாலும் கேங்ஸ்டர் தொழிலுக்குத் தள்ளப்படுவதையும் அதன் பிறகு அவன் தன்னைப் பாதுகாத்துக்கொள்ள படிப்படியாக அத்தொழிலில் தேர்ச்சி பெறுவதையும் தேர்ச்சி பெற்று ஓரளவு அதிகாரம் மிக்க இடத்துக்கு வந்த பிறகு அந்த அதிகாரத்தைப் பயன்படுத்திக் கெட்ட ஆட்டம் போடுவதையும் ரவுடிகளை தம் சுயநலத்துக்குப் பயன்படுத்தி தேவை முடிந்த பின் தூக்கி எறியும் அரசியல்வாதிகளால் அரசு என்னும் அமைப்பின் கரங்களில் சிக்கி சின்னாபின்னமாகி அடங்கிப் போவதையும் உண்மைக்கு நெருக்கமாகச் சொன்ன படம் ‘புதுப்பேட்டை’.

முந்தைய கேங்ஸ்டர் படங்களைப் போல் அல்லாமல் இந்தப் படத்தின் நாயகனான ’கொக்கி’ குமார் ஏழைகளைப் பாதுகாப்பதற்காக மட்டும் கொலை, கொள்ளையில் ஈடுபடும் அப்பழுக்கற்ற நல்லவன் அல்ல. தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக அரிவாளைக் கையிலெடுத்தவன், பாலியல் தொழிலாளியை (சினேகா) மனைவியாக ஏற்கும் மனிதநேயன். அதே நேரம் தன் தாயின் மரணத்துக்குக் காரணமான தந்தையை நம்பவைத்துக் கொல்பவன். தன் உற்ற நண்பனின் தங்கையை (சோனியா அகர்வால்) கண்டவுடன் அவளுடைய அழகால் ஈர்க்கப்பட்டு அவளுடைய விருப்பத்தை மீறித் தாலி கட்டிவிடுபவன். அவள் தன்னுடைய ஆசைக்கு இணங்க மறுத்தால் அவளுடைய குடும்பத்தைக் கொன்றுவிடுவதாக மிரட்டுபவன். அரசியல் பதவி, அதிகாரத்துக்கு ஆசைப்பட்டு கட்சித் தலைவருக்காக சில குற்றங்களைச் செய்பவன். இப்படி அதிகார மமதையும் சுயநலமும் நிறைந்த சராசரி மனிதனாக இருக்கும் கேங்க்ஸ்டரைப் படைத்திருந்தார் செல்வராகவன். ‘புதுப்பேட்டை’ தமிழ் சினிமாவின் முக்கியமான கேங்ஸ்டர் படமாக அமைந்ததற்கு இதுவே முக்கியக் காரணம்.

துணை நின்ற பங்களிப்புகள்

செல்வராகவனின் கதையையும் திரைக்கதையையும் அவர் வடிவமைத்த உண்மைக்கு நெருக்கமான கதாபாத்திரங்களையும் உயிர்ப்புடன் உலவவிட பாலகுமாரனின் வசனங்கள் பெரும்பங்காற்றின. இதுதவிர யுவனின் பின்னணி இசை, காட்சிகளின் தன்மைக்கு ஏற்ப வெவ்வேறு நிறங்களையும் பின்னணியையும் பயன்படுத்திய அரவிந்த் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவு, கோலா பாஸ்கரின் படத்தொகுப்பு , கலை இயக்கம் என தொழில்நுட்ப அம்சங்கள் அனைத்தும் சர்வதேச தரத்தில் அமைந்திருந்த படம் ‘புதுப்பேட்டை’. அந்த வகையில் படமாக்கம் என்ற அளவிலும் தனித்துவம் மிக்க முன்னோடியான சிறப்பைக் கொண்ட கேங்ஸ்டர் படம் 'புதுப்பேட்டை'.

நாயகனாக நடித்திருந்த தனுஷ் கொக்கி குமாராகவே வாழ்ந்திருந்தார். ஒல்லியான உடலைக் கொண்டு குடிசைப் பகுதியில் வாழும் பள்ளிச் சிறுவனாக, சக ரவுடிகளால் கிண்டலடிக்கப்படும் கத்துக்குட்டியாக படிப்படியாக தேர்ச்சியடையும் கேங்ஸ்டராக சர்வ அதிகாரம் படைத்த ரவுடிகளின் தலைவனாக இறுதியில் சிறையில் அடைபட்டு “யாராவது இருக்கீங்களா… பயம்மா” இருக்கு என்று தனிமையில் புலம்பும் சாமான்ய மனிதனாக அனைத்து வடிவங்களிலும் தத்ரூபமாக நடித்திருந்தார் தனுஷ்.

பாலாசிங், சோனியா அகர்வால். சினேகா, தென்னவன் என துணை நடிகர்களும் தமது பங்கைச் சிறப்பாகச் செய்திருப்பார்கள். சிரித்துக்கொண்டே காலை வாரும் அரசியல்வாதியாக அழகம்பெருமாள் ஒரு துணை நடிகராக அசத்திய படம் இது. “தியாகம் தான் உன்னை உயர்த்தும் குமாரு”, “செந்தமிழ்க் கவிஞன்” நான் என அவர் இந்தப் படத்தில் பேசும் வசனங்கள் இன்றும் சமூக ஊடகங்களில் மீம்களாக பட்டையைக் கிளப்புகின்றன.

இறவாப் புகழ்பெற்ற பாடல்கள்

’புதுப்பேட்டை’ படத்தின் பாடல்கள் பற்றியே தனிக் கட்டுரை எழுதலாம். அந்த அளவுக்கு வெளியான காலத்தில் மிகப் பெரிய வெற்றியைப் பெற்ற அந்தப் பாடல்கள் அனைத்தும் இன்றும் இசை ரசிகர்களின் விருப்பத்துக்குரிய பாடல்களாக நிலைத்திருக்கின்றன. யுவனின் இசை மட்டுமல்லாமல் முத்துக்குமாரின் பாடல் வரிகளுக்காகவும் அனைத்துப் பாடல்களும் ரசிக்கப்படுகின்றன. குறிப்பாக படத்தில் இடம்பெற தவறிய ‘ஒரு நாளில் வாழ்க்கை இங்கே’ பாடல் இசை, யுவனின் இனிமையான குரல், வாழ்வு குறித்த நம்பிக்கையைத் தரும் முத்துக்குமாரின் உருக்கமான வரிகள் ஆகியவற்றுக்காக இளைஞர்களால் கொண்டாடப்படுகிறது.

இப்படியாக பல சிறப்புகளைப் பெற்ற ‘புதுப்பேட்டை’ அரிதாகவே தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் திரைப்படமாக இருக்கிறது. தொலைக்காட்சியில் ஒளிபரப்பும்போது 18 வயதுக்குட்பட்டவர்கள் பார்க்கத்தகாத காட்சிகள் வெட்டப்பட்டுவிடும் என்பதால் இந்தப் படத்தை முழுமையாக ரசிக்க முடிவதில்லை. அமேசான் பிரைம் ஸ்ட்ரீமிங் இணையதளத்தில் இந்தப் படம் பார்க்கக் கிடைக்கிறது. சினிமா ரசிகர்கள் அனைவரும் ஒரு முறையேனும் பார்க்க வேண்டிய திரைப்படம் ‘புதுப்பேட்டை’ என்பதில் சந்தேகமேயில்லை.

SCROLL FOR NEXT