தமிழ் சினிமா

ரசிகர்களின் செயல்: 'மாஸ்டர்' படக்குழுவினர் அதிருப்தி

செய்திப்பிரிவு

ரசிகர்களின் செயலால் 'மாஸ்டர்' படக்குழுவினர் கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மாஸ்டர்'. தமிழக அரசு இறுதிக்கட்டப் பணிகளுக்கு அனுமதி அளித்துள்ளதால், தற்போது 'மாஸ்டர்' இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. படத்தை தீபாவளிக்கு வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

அவ்வப்போது 'மாஸ்டர்' படம் குறித்து வதந்திகள் ஏதேனும் வெளியாகும். அதற்கு படக்குழுவினர் மறுப்பு தெரிவித்து வந்தார்கள். கடந்த 2 நாட்களாக 'மாஸ்டர்' படம் தணிக்கை செய்யப்பட்டுவிட்டது என்று தகவலைப் பரப்பினார்கள்.

அதோடு நின்றுவிடாமல் போட்டோஷாப் செய்யப்பட்ட தணிக்கைச் சான்றிதழையும் வெளியிட்டனர். அதில் 3 மணி நேரம், 1 நிமிடப் படமாக 'மாஸ்டர்' உருவாகியுள்ளதாகவும், அதற்கு 'யு/ஏ' சான்றிதழ் எனவும் குறிப்பிட்டு இருந்தது. உண்மையில், இன்னும் இறுதிக்கட்டப் பணிகள் எதுவுமே முடிவடையவில்லை என்பதால், இன்னும் தணிக்கைக்கு விண்ணப்பிக்கவே இல்லை படக்குழு.

இது தொடர்பாக படக்குழுவினரிடம் விசாரித்தபோது, "தணிக்கை என்பது அரசாங்கம் சம்பந்தப்பட்டது. அதிலும் ரசிகர்கள் இவ்வாறு விளையாடி இருப்பது ரொம்பவே அதிர்ச்சியாக இருக்கிறது. இன்னும் தணிக்கைக்கு விண்ணப்பிக்கவே இல்லை" என்று தெரிவித்தார்கள்.

SCROLL FOR NEXT