'கோப்ரா' படத்தில் இன்னும் எவ்வளவு காட்சிகள் உள்ளன, டீஸர் எப்போது உள்ளிட்ட கேள்விகளுக்கு இயக்குநர் அஜய் ஞானமுத்து பதிலளித்துள்ளார்.
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம், ஸ்ரீநிதி ஷெட்டி, இர்ஃபான் பதான் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'கோப்ரா'. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வரும் இந்தப் படத்தை பெரும் பொருட்செலவில் லலித் தயாரித்து வருகிறார்.
கரோனா ஊரடங்கு முடிந்தவுடன் இதர காட்சிகளின் படப்பிடிப்பைத் தொடங்க படக்குழு முடிவு செய்துள்ளது. விக்ரமை இயக்கி வருவது இயக்குநர் அஜய் ஞானமுத்து கூறியிருப்பதாவது:
" 'கோப்ரா' படத்தில் நிறைய விஷயங்கள் புதிதாக ட்ரை பண்ணியிருக்கோம். விக்ரம் சாரை வைத்துக்கொண்டு எந்த மாதிரியான காட்சிகளையும் முயற்சிக்கலாம். 7 கெட்டப்புக்கும் வித்தியாசமான குரல், நடை, பார்வை என அனைத்துமே செய்திருக்கிறார். ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் புதிதாக ட்ரை பண்ணியிருக்கார்.
5 காட்சிகளில் விக்ரம் சாருடைய நடிப்பைப் பார்த்து மிரண்டு போய்விடுவீர்கள். விக்ரம் சார் அற்புதமாக நடித்த காட்சிகளைப் பட்டியலிட்டால், அதில் ‘கோப்ரா’ படத்திலிருந்து ஒரு காட்சி இருக்கும். அந்த அளவுக்கு மிரட்டியிருக்கார்.
விக்ரம் சார் பேசிக் கொண்டிருக்கும் காட்சி ஒன்றை 6 நாட்கள் ஷூட் பண்ணியிருக்கோம். கிராபிக்ஸ் எல்லாம் முடிந்தால் அந்தக் காட்சி வேறு மாதிரி பிரம்மாண்டமாக இருக்கும். அந்தக் காட்சி கண்டிப்பாகப் பேசப்படும். இன்னும் 40% காட்சிகள் பாக்கியிருக்கிறது. ஆகையால் டீஸர் நேரமெடுக்கும்.
ரஷ்யாவில் ஷூட் பண்ணும்போது பாதியிலேயே வந்துவிட்டோம். அந்தக் காட்சியை கிராபிக்ஸில் செய்துவிட முடியாது. அதற்கான அரங்குகள் எல்லாம் போட்டுப் பண்ணும்போது பட்ஜெட் அதிகமாகிவிடும். ஆகையால் அதுகுறித்து இன்னும் பேசவில்லை. அனைத்துமே சரியானவுடன்தான் பேச வேண்டும்".
இவ்வாறு இயக்குநர் அஜய் ஞானமுத்து தெரிவித்துள்ளார்.