தமிழ் சினிமா

தன் படங்களுக்கான கதாபாத்திரத் தேர்வின் பின்னணி: இயக்குநர் வெற்றிமாறன் வெளிப்படை

செய்திப்பிரிவு

தன் படங்களுக்கான கதாபாத்திரத் தேர்வின் பின்னணி சுவாரசியங்களை இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.

கரோனா ஊரடங்கில் அனைவருமே நேரலையில் பேட்டி மற்றும் கலந்துரையாடல் நடத்தி வருகிறார்கள். அவ்வாறு தனியார் யூடியூப் இணையதளம் ஒன்று ஒருங்கிணைத்த கலந்துரையாடலில் பயிற்சியாளர் பாசு ஷங்கர், இந்திய கிரிக்கெட் அணி வீரர் தினேஷ் கார்த்திக் மற்றும் இயக்குநர் வெற்றிமாறன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தினேஷ் கார்த்திக் மற்றும் வெற்றிமாறன் இருவருக்குமே உடற்பயிற்சியாளராக பாசு ஷங்கர் இருந்து வருகிறார். இந்தக் கலந்துரையாடலில் தனது படங்களுக்கான கதாபாத்திரத் தேர்வு குறித்துப் பேசியுள்ளார் இயக்குநர் வெற்றிமாறன்.

அந்தப் பகுதி:

பாசு: உங்கள் படங்களில் நடிகர்கள் தேர்வை எப்படிச் செய்கிறீர்கள்? கதையை எழுதிவிட்டு யோசிப்பீர்களா அல்லது நடிகருக்காக கதை யோசிப்பீர்களா?

இயக்குநர் வெற்றிமாறன்: அது ஒவ்வொரு முறை மாறும். 'பொல்லாதவன்' எழுதும்போது என் மனதில் தனுஷ் இல்லை. அதன் பிறகு அவர் நடித்தார். மீண்டும் அதே அணி. தனுஷ், வேல்ராஜ், ஜி.வி. பிரகாஷ் வைத்து ஒரு படம் எடுப்போம் என்று முடிவு செய்து, தனுஷுக்காக எடுத்ததுதான் 'ஆடுகளம்'. 'விசாரணை' படத்தைப் பொறுத்தவரை அது ஒரு சிந்தனையாக மட்டும் இறுதி செய்து வைத்திருந்தேன். திரைக்கதை எழுதவில்லை. பின் தினேஷிடமும், சமுத்திரக்கனியிடமும் பேசினேன். அவர்கள் ஒப்புக்கொண்டார்கள். 'வட சென்னை' தனுஷை வைத்து எழுதப்பட்டதுதான்.

ராஜன் கதாபாத்திரத்தில் முதலில் விஜய் சேதுபதியை நடிக்க வைக்கத் திட்டமிட்டிருந்தேன். அவரால் தேதிகள் தர முடியவில்லை. பின் தெலுங்கு நடிகர் ரவி தேஜாவிடம் கேட்டிருந்தேன். அவர் நடிக்க ஒப்புக்கொண்டார். ஆனால் கடைசி நிமிடத்தில் அவரால் தேதிகள் ஒதுக்க முடியவில்லை. பிறகுதான் அமீர் அந்தக் கதாபாத்திரத்தில் நடித்தார்.

'அசுரன்' படம் முதலில் தனுஷை வைத்து யோசிக்கவில்லை. அது முதலில் வேறு கதையாக இருந்தது. கென் கருணாஸ் மகன், சமுத்திரக்கனி போன்ற ஒரு நடிகர் அப்பா கதாபாத்திரம், இருவரது பயணம் மட்டுமே படமாக இருந்தது. 'விசாரணை' மாதிரியான ஒரு சின்ன படமாகத்தான் யோசித்து வைத்திருந்தேன். தனுஷ் நடிக்கிறார் என்று முடிவானதும், ஃபிளாஷ்பேக், மனைவி, உறவுகள் என்று அவருக்காக சில விஷயங்கள் சேர்த்தோம். இப்படி சில சமயம் நடிகருக்காக கதை மாறும், கதைக்காக நடிகர் மாறுவார்".

இவ்வாறு வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT