தமிழ் சினிமா

'ரன்' படத்தை ஒப்புக்கொண்டது; ஷட்டர் காட்சியை இயக்குநர் விவரித்த விதம்: மாதவன் பகிர்வு

செய்திப்பிரிவு

'ரன்' படத்தை ஒப்புக்கொண்டது குறித்தும், ஷட்டர் காட்சியை இயக்குநர் விவரித்த விதம் குறித்தும் மாதவன் பகிர்ந்துள்ளார்.

2002-ம் ஆண்டு லிங்குசாமி இயக்கத்தில் மாதவன், மீரா ஜாஸ்மீன், ரகுவரன், அதுல் குல்கர்னி, அனுஹாசன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'ரன்'. ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில் வெளியான இந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தியிலும் இந்தப் படம் ரீமேக் செய்யப்பட்டது.

இந்தப் படத்திலிருந்துதான் மாதவன் ஆக்‌ஷன் படங்களிலும் நடிக்கத் தொடங்கினார். 'ரன்' படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டது குறித்தும், இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வினுடன் நடந்த நேரலைக் கலந்துரையாடலில் பகிர்ந்துள்ளார் மாதவன்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

"நாயகன் அந்தஸ்து வந்தவுடன் எந்த மாதிரி படங்களைத் தேர்வு செய்ய வேண்டும் என்று எனக்கு யாரும் சொல்லிக் கொடுக்கவில்லை. மனதுக்குப் பிடித்த கதைகளை மட்டுமே தேர்வு செய்து நடித்தேன். அதில் நிறைய முறை தோற்றுப் போயிருக்கிறேன். பாதுகாப்பு பயிற்சி படித்திருப்பதால் எனக்கு சண்டைக் காட்சிகள் எளிதாக வரும் எனத் தெரியும். அதற்காக சாக்லெட் பாய் ஹீரோ சண்டை போடுகிறான் என்ற நினைப்பே வரக் கூடாது என்று விரும்புவேன். அப்படி ஒரு படத்துக்காகக் காத்திருந்தேன்.

லிங்குசாமி சார் 'ரன்' கதையைச் சொன்னார். ஷட்டரை மூடும் காட்சியைச் சொன்னவுடன்தான் அந்தப் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன். லிங்குசாமி சார் சொன்ன வார்த்தைகள் இன்னும் அப்படியே ஞாபகத்தில் உள்ளன. நீங்கள் ஷட்டரை மூடியவுடன் எல்லோருமே பிரமித்து நிற்பாங்க. உங்க கையை பாக்கெட்டில் தடவி ரெடி ஆவீர்கள். ஒரு ஆள் ஓடி வருவான். ஜிவ்வ்வ்வ்வ் என்று ஒரு அடி அடிப்பீர்கள். செத்த மாதிரி விழுவான் சார் என்றார்.

அப்படியே கண் முன்னாடி எனக்கு அந்தக் காட்சி விரிந்தது. ஒரு ஆக்‌ஷன் ஹீரோவுக்கு இது சரியான கதை என்று நினைத்தேன். நான் எப்படி ஒரு கதையை எதிர்பார்த்து இருந்தேனோ, அப்படியே இருந்தது. மணி சார், கெளதம் சார் உள்ளிட்ட அனைவருக்கும் அந்தப் படத்தின் ப்ரிவ்யூ போட்டேன். அந்த ஷட்டர் காட்சியைப் பார்த்தவுடன் என்னா அடி என்று சொன்னார்கள். அதற்குப் பிறகு அனைவருமே ரசித்துப் பார்த்தார்கள்”.

இவ்வாறு மாதவன் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT