தமிழ் சினிமா

கார்த்தி பிறந்த நாள்; ஃபர்ஸ்ட் லுக் வேண்டாம்: 'சுல்தான்' படக்குழுவினர் முடிவு

செய்திப்பிரிவு

கரோனா அச்சுறுத்தல் சமயத்தில் கார்த்தியின் பிறந்த நாளுக்கு 'சுல்தான்' ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட வேண்டாம் எனப் படக்குழு முடிவு செய்துள்ளது.

தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகரான கார்த்தி நாளை (மே 25) பிறந்த நாள் கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு கார்த்தியின் ரசிகர்கள் இன்று (மே 24) மாலையிலிருந்தே அவரைப் பற்றிய ட்வீட்கள், புகைப்படங்கள் என ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.

தற்போது கார்த்தி நடிப்பில் 'சுல்தான்' மற்றும் 'பொன்னியின் செல்வன்' ஆகிய படங்கள் தயாராகி வருகின்றன. இதில் 'சுல்தான்' படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் நிலையில் உள்ளது. எஸ்.ஆர்.பிரபு தயாரித்து வரும் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நாளை வெளியாகும் எனப் பலரும் எதிர்பார்த்தார்கள்.

ஆனால், கரோனா அச்சுறுத்தலால் மக்கள் பெரும் இடர்ப்பாடுகளுக்கு உள்ளாகியிருக்கிறார்கள். இந்தச் சமயத்தில் ஃபர்ஸ்ட் லுக் வெளியிட வேண்டாம் என்று படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். கார்த்தியும் இதையே சொல்லியிருக்கிறார். ஆகையால், ஃபர்ஸ்ட் லுக் தயாராக இருந்தும் வெளியிடாமல் வைத்துள்ளது படக்குழு.

கரோனா ஊரடங்கு முடிந்து இயல்பு நிலை திரும்பியவுடன்தான் 'சுல்தான்' ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிடவுள்ளது படக்குழு. அதனைத் தொடர்ந்து படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளையும் தொடங்கவுள்ளது.

'ரெமோ' இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கியுள்ள 'சுல்தான்' படத்தில் கார்த்தி, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். விவேக் -மெர்வின் இசையமைப்பாளர்களாகப் பணிபுரிந்து வருகிறார்கள்.

SCROLL FOR NEXT