ரஜினி கூறிய அட்வைஸ் மற்றும் வெப் சீரிஸ் இயக்காதது குறித்து கே.எஸ்.ரவிகுமார் பேட்டியொன்றில் பகிர்ந்துள்ளார்.
கரோனா அச்சுறுத்தலால் இந்தியா முழுக்கவே திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதனால் தயாராகி இருந்த பல படங்கள் திரையரங்கில் வெளியிடப்படாமல், நேரடியாக ஓடிடி தளங்களில் வெளியாகி வருகின்றன. இந்த ஊரடங்கில் மக்களிடையே ஓடிடி தளங்கள் பிரபலமாகி வருகின்றன.
இந்த ஓடிடி தளங்களில் பல்வேறு வெப் சீரிஸ்கள் உள்ளன. இவற்றில் பல்வேறு முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். முன்னணி இயக்குநர்களும் இயக்கியுள்ளனர். தமிழ்த் திரையுலகில் இயக்குநர் வெற்றிமாறன், கெளதம் மேனன், விக்னேஷ் சிவன் உள்ளிட்ட பலர் வெப் சீரிஸ் இயக்கத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனிடையே தனக்கு வெப் சீரிஸ் இயக்க வாய்ப்பு வந்ததாகவும், ஆனால் தவிர்த்துவிட்டதாகவும் இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் தெரிவித்துள்ளார்.
வெப் சீரிஸ் தொடர்பாக கே.எஸ்.ரவிகுமார் கூறியிருப்பதாவது:
"வெப் சீரிஸ் இயக்குவதற்கு நல்லதொரு வாய்ப்பு அமைந்தால் பண்ணுவேன். ஏற்கெனவே ஒரு வெப் சீரிஸ் இயக்க வாய்ப்பு வந்தது. பெரிய ஸ்டுடியோ வைத்திருப்பவர்கள் கேட்டார்கள். அப்போது எனக்கு அவர்கள் சொன்ன சில விஷயங்கள் பிடிக்கவில்லை. சினிமா என்றால் பட்ஜெட்டை தோராயமாகச் சொல்லிவிடலாம்.
வெப் சீரிஸ் என்றவுடன் ஒரு எபிசோடுக்கு இவ்வளவுதான் பட்ஜெட் என்றெல்லாம் பேசினார்கள். அதற்கு நானே தயாரித்துக் கொடுக்கிறேன் என்று சொல்லி அனுப்பிவிட்டேன். ரம்யா கிருஷ்ணனின் சகோதரி கூட ஒரு வெப் சீரிஸுக்காகப் பேசினார். எனக்கு அதில் உள்ள சில விஷயங்கள் ஒத்துவரவில்லை. அனைத்துமே கைகூடும் பட்சத்தில் இயக்குவேன்.
இறுதிவரை சினிமா என்பது முடிவாகிவிட்டது. அதுவரைக்கும் மதிப்பும், மரியாதையுடன் இருக்க வேண்டும் என்பதுதான் என் எண்ணம். ரொம்ப இறங்கிப் போக வேண்டிய தேவையே எனக்கு இல்லை.
ரஜினி சார் பல முறை கிண்டல் பண்ணுவார். "உங்களிடம் காசு ஏதாவது குறைவாக இருக்கா.. ஏன் இந்த மாதிரி சின்னச் சின்ன படங்கள் எல்லாம்" என்று சொல்வார். "வெயிட் பண்ணுங்க நல்லதா பண்ணுங்க" என்று அவ்வப்போது சொல்வார். பணத்துக்காக ஒப்புக்கொண்டேன் என்றால் எது வேண்டுமானாலும் பண்ணுவேன். எனக்கு அது அவசியமில்லை”.
இவ்வாறு கே.எஸ்.ரவிகுமார் தெரிவித்துள்ளார்.