தமிழ் சினிமா

சூடுபிடிக்கும் தயாரிப்பாளர் சங்கத் தேர்தல்: விஷால் களமிறங்க முடிவு

செய்திப்பிரிவு

செப்டம்பர் 30-ம் தேதிக்குள் நடைபெறவுள்ள தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில், விஷால் தனது அணியினருடன் களமிறங்க முடிவு செய்துள்ளார்.

கரோனா அச்சுறுத்தல் தொடங்கும் போது, ஜூன் 30-ம் தேதிக்குள் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து தயாரிப்பாளர்கள் பலரும் அணிகளாகப் பிரிந்து களம் காணத் தயாரானார்கள்.

அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா தலைமையில் ஒரு அணி, தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி தலைமையில் ஒரு அணி என இரண்டு அணிகள் களத்தில் இருப்பது உறுதியானது. 3-வது அணி பேச்சுவார்த்தையில் இருக்கிறது. ஆனால் இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

இதனிடையே, கரோனா பாதிப்பு மற்றும் ஊரடங்கு அமலில் இருப்பதைக் கருத்தில் கொண்டு தேர்தல் நடத்துவதற்கான காலக்கெடுவை நீட்டிக்கக் கோரி தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்கள் சிலர் வழக்குத் தொடர்ந்தனர். அந்த வழக்கை விசாரித்த நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி, தேர்தலை செப்டம்பர் 30-ம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்றும், அதுகுறித்து அறிக்கையை சிறப்பு அதிகாரி அக்டோபர் 30-க்குள் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

கரோனா ஊரடங்கு முடியவுள்ள நிலையில், தயாரிப்பாளர் சங்கத் தேர்தலும் சூடுபிடிக்கவுள்ளது. இன்னும் தேர்தல் தேதி அறிவிக்கப்படாத நிலையில், கடந்த தேர்தலில் போட்டியிட்ட அதே அணியினருடன் விஷாலும் களம் காணவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து விசாரித்தபோது, "உண்மைதான். இப்போதுதான் பேச்சுவார்த்தையில் இருக்கிறார். போட்டியிடுவாரா அல்லது வெறும் ஆதரவு மட்டும் கொடுப்பாரா உள்ளிட்டவை விரைவில் வெளியாகும்" என்று தெரிவித்தனர்.

இப்போதுள்ள சூழலில் அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா தலைமையில் ஒரு அணி மற்றும் தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி தலைமையில் ஒரு அணி போட்டியிடுவது உறுதியாகிவிட்டது. மேலும் தாணு, கேயார் ஆகியோர் தலைமையில் ஒரு அணி, விஷால் தலைமையில் ஒரு அணி என 4 அணிகள் போட்டியிடும் எனத் தெரிகிறது.

SCROLL FOR NEXT