தமிழ் சினிமா

எவ்வளவு கடுமையாக உழைத்திருக்கிறார்: ஜோதிகாவுக்கு ராதிகா பாராட்டு

செய்திப்பிரிவு

'பொன்மகள் வந்தாள்' படம் தொடர்பாக ஜோதிகா அளித்த பேட்டிக்கும் ராதிகா பாராட்டு தெரிவித்துள்ளார்.

ஜே.ஜே.பிரட்ரிக் இயக்கத்தில் ஜோதிகா, பாக்யராஜ், பார்த்திபன், பாண்டியராஜன், தியாகராஜன், பிரதாப் போத்தன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'பொன்மகள் வந்தாள்'. 2டி நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் இந்தியத் திரையுலகில் ஓடிடி தளத்தில் வெளியாகும் முதல் படமாக அமைந்துள்ளது. மே 29-ம் தேதி அமேசான் பிரைம் தளத்தில் இந்தப் படம் வெளியாகவுள்ளது.

இந்தப் படத்தை விளம்பரப்படுத்த, கரோனா லாக்டவுன் என்பதால் ஜூம் செயலி மூலமாக பத்திரிகையாளர்களைச் சந்தித்தார் ஜோதிகா. அப்போது படத்தின் கதைக்களம், கதையின் பிரதான கதாபாத்திரத்தில் நடிப்பது, 'சந்திரமுகி 2' உள்ளிட்டவை குறித்து தெளிவாக எடுத்துரைத்தார். இந்தப் பேட்டியில் முழுக்க தமிழிலேயே தன் பதிலைத் தெரிவித்தார்.

அவரது பேட்டி எழுத்து வடிவிலும், வீடியோவாகவும் வெளியானது. ஜோதிகாவின் தெளிவான பேச்சுக்கு பலரும் பாராட்டு தெரிவித்தார்கள். ஜோதிகாவின் பேட்டி குறித்து ராதிகா சரத்குமார் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

"நம்பிக்கையுடன், தெளிவாக தமிழைப் பேசும் ஜோதிகாவின் முயற்சியை நான் பாராட்டுகிறேன். எவ்வளவு கடுமையாக உழைத்திருக்கிறார் என்பது தெரிகிறது. வடக்கிலிருந்து இங்கு வந்து இதைக் கச்சிதமாகச் செய்த ஒரே நடிகை. அவருக்குப் பாராட்டுகள்"

இவ்வாறு ராதிகா சரத்குமார் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT