ஜீ தொலைக்காட்சியின் ‘ச ரி க ம ப’ இசை நிகழ்ச்சி தொடங்கப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் விதமாக நாடு முழுவதும் உள்ள பல்வேறு மொழிகளைச் சேர்ந்த ஜீ சேனல்கள் இணைந்து 25 மணி நேர நேரடி டிஜிட்டல் இசை நிகழ்ச்சியை நடத்துகிறது. தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்ட பிராந்திய மொழிகளைச் சேர்ந்த ‘ச ரி க ம ப’ கலைஞர்கள் 350 க்கும் மேற்பட்டவர்கள் இதில் கலந்துகொள்கின்றனர்.
இசைக் கலைஞர்கள் தங்கள் பாட்டுத் திறமையை வீட்டில் இருந்தபடியே நேரலையாக வழங்குவர். கரோனா வைரஸ் தொற்று நோயால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் ‘கிவ் இந்தியா’ அமைப்புக்கு நிதி திரட்டுவதற்காக கலைஞர்கள் இந்நிகழ்ச்சிகளில் பங்கேற்கின்றனர்.
இந்த நிகழ்ச்சி தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட ஜீ சேனல்களின் வலைத்தள முகநூல் பக்கங்களில் இன்று மே 23 மற்றும் நாளை 24 தேதிகளில் நேரலையாக நடைபெறும். இந்த டிஜிட்டல் நிகழ்ச்சி நாளை (மே 24) இரவு 8 மணி ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகும்.
இந்த இசை நிகழ்ச்சியில் விஜய் பிரகாஷ், ஸ்ரீனிவாஸ், சுஜாதா, ஹரிசரண், ராஹுல் நம்பியார், சக்திஸ்ரீ கோபாலன், ரஞ்சித், சரண்யா ஸ்ரீநிவாஸ் உள்ளிட்ட முன்னணி இசைக் கலைஞர்கள் பங்கேற்கின்றனர். 'ச ரி க ம ப' கடந்த சீசன்களின் முன்னணிப் போட்டியாளர்களான வர்ஷா, ரமணி அம்மாள், அஸ்லம், கமலேஷ், ஜஸ்கரன் சிங்க், விஷ்வ பிரசாத், ஸ்ரீநிதி, சுகன்யா, ஷரிமிலி, ஐஸ்வர்யா, ஆர்யா நந்தா, அருள் பிரகாசம், ஜனகன் ஆகியோரும் கலந்து கொள்கின்றனர்.
இது குறித்து ஜீ நிறுவனத்தின் தென்னிந்திய பிசினெஸ் ஹெட் சிஜு பிரபாகரன் கூறுகையில் ‘ நாடு முழுவதும் உள்ள ஜீ - சேனல்கள் ஒன்றிணைந்து வழங்கும் இந்த வித்தியாசமான நிகழ்ச்சி சமூகத்துக்குச் சேவை செய்யவும் அவர்கள் வாழ்வாதாரத்தை உயர்த்தவும், உணர்வுகளுக்கு ஊக்கமளிக்கவும் வாய்ப்பளித்துள்ளது. நாட்டின் தலை சிறந்த இசைக் கலைஞர்களின் நிகழ்ச்சியாக இது மாறும்போது இன்னும் கொண்டாட்டமானதாக இருக்கும்!’ என்றார்.