தமிழ் சினிமா

குறும்படத்துக்கு இசையமைத்துள்ள ஏ.ஆர்.ரஹ்மான்

செய்திப்பிரிவு

'கார்த்திக் டயல் செய்த எண்' குறும்படத்துக்கு இசையமைத்துள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான் என்பது உறுதியாகியுள்ளது.

கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, த்ரிஷா நடிப்பில் பெரும் வரவேற்பைப் பெற்ற படம் 'விண்ணைத்தாண்டி வருவாயா'. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த இந்தப் படம் 2010-ம் ஆண்டு பிப்ரவரி 26-ம் தேதி வெளியானது. இந்தப் படத்தின் பாடல்கள், கதையமைப்பு, வசனங்கள் என அனைத்து தரப்பிலும் கொண்டாடப்பட்டது.

இந்தப் படத்துக்குக் கிடைத்த வரவேற்பால், 2-ம் பாகத்துக்கான கதையை எழுதி முடித்தார் கெளதம் மேனன். ஆனால், வெவ்வேறு படங்கள் உருவாக்கத்தில் இருந்ததால் 'விண்ணைத்தாண்டி வருவாயா 2' படத்தை தொடாமல் இருந்தார்.

தற்போது 'விண்ணைத்தாண்டி வருவாயா 2' படத்திலிருந்து ஒரு பகுதியை எடுத்து 'கார்த்திக் டயல் செய்த எண்' என்னும் குறும்படத்தை இயக்கியுள்ளார். கரோனா ஊரடங்கினால் சிம்பு மற்றும் த்ரிஷா இருவரும் வீட்டிலிருந்து கொண்டே கெளதம் மேனன் வீடியோ காலில் சொல்வதைக் கேட்டு நடித்துக் கொடுத்துள்ளனர்.

'விண்ணைத்தாண்டி வருவாயா' படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். இதன் 2-ம் பாகம் கதையிலிருந்து ஒரு பகுதியை குறும்படமாக உருவாக்கியுள்ளதால் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பாரா என்று பலரும் கேள்விகள் எழுப்பி வந்தார்கள். ஆனால், கெளதம் மேனன் வேண்டுகோளை ஏற்று படத்துக்கு எந்தளவுக்கு உழைப்பாரோ அதே அளவுக்கு உழைப்பைக் கொடுத்து பின்னணி இசையமைத்துக் கொடுத்துள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான்.

தற்போது இறுதிக்கட்டப் பணிகளில் மும்முரமாக இருக்கிறது 'கார்த்திக் டயல் செய்த எண்' குழு. இன்னும் ஓரிரு நாட்களில் இந்தக் குறும்படம் இணையத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT