தமிழ் சினிமா

வைத்த காலைப் பின்வாங்காத வையக வீரர் சூர்யா: பார்த்திபன் புகழாரம்

செய்திப்பிரிவு

வைத்த காலைப் பின்வாங்காத வையக வீரர் சூர்யா என்று 'பொன்மகள் வந்தாள்' டிஜிட்டல் வெளியீடு தொடர்பாக பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

ஜே.ஜே.பிரட்ரிக் இயக்கத்தில் ஜோதிகா நடிப்பில் உருவாகியுள்ள படம் 'பொன்மகள் வந்தாள்'. 2டி நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் மே 29-ம் தேதி நேரடியாக அமேசான் ப்ரைமில் வெளியாகவுள்ளது. சூர்யா தயாரித்துள்ள இந்தப் படத்தில் பார்த்திபன், தியாகராஜன், பாக்யராஜ், பாண்டியராஜன், பிரதாப் போத்தன் உள்ளிட்ட பலர் ஜோதிகாவுடன் நடித்துள்ளனர்.

இப்படத்தை டிஜிட்டலில் வெளியிட திரையரங்க உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இறுதியாக அனைத்துப் பிரச்சினைகளையும் மீறி மே 29-ம் தேதி 'பொன்மகள் வந்தாள்' டிஜிட்டலில் வெளியாகவுள்ளது.

இந்த வெளியீடு தொடர்பாக இயக்குநர் பார்த்திபன் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது:

"ஏழை மக்களின் வாழ்வைப் பாதிக்கிற கடையை மூடலாமா, வேண்டாமா என்று உயர் நீதிமன்றம் தொடங்கி உச்ச நீதிமன்றம் வரை படிப்படியாக ஏறி இறங்கிப் போராடி வரும் இந்த நேரத்தில், நம்ம முடியைத் திருத்தலாமா வேண்டாமா என்ற யோசனை வந்துவிட்டது. திருத்தம் என்பது முடியில் மட்டுமே இல்லை, நிறைய முடிவுகளிலும் இருக்கிறது. சட்டத் திருத்தங்கள், தொழில் சார்ந்த வரைமுறை திட்டங்கள், அதில் சில திருத்தங்கள் இப்படி நிறைய தேவைப்படுகிறது. இப்போது ஏன் அதெல்லாம் என்கிறீர்களா?

'பொன்மகள் வந்தாள்' டிஜிட்டல் வெளியீடு. இப்போது மே 29-ம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியாகவுள்ளது. தைரியம்தான் புருஷ லட்சணம் என்று சொல்வார்கள். ஒரு தைரியலட்சுமியின் புருஷன் எத்தனை வைராக்கியத்துடன் தன் துணையின் காதல் கணவராக, கவுரவக் காவலனாக, வைத்த காலைப் பின்வாங்காத வையக வீரராக OTT - ஒழுக்கம், தெளிவு, தைரியமுடன் 'பொன்மகள் வந்தாள்' படத்தை அமேசானில் வெளியிடுகிறார் சூர்யா. இந்தப் படத்தின் அறிமுக இயக்குநர் பிரட்ரிக் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்".

இவ்வாறு பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT