காதலனை விட்டுப் பிரிந்தார் ப்ரியா பவானி சங்கர் என்று வெளியாகியுள்ள தகவலுக்கு அவரது தரப்பு மறுப்பு தெரிவித்துள்ளது.
'குருதி ஆட்டம்', 'களத்தில் சந்திப்போம்', 'பொம்மை', 'இந்தியன் 2' உள்ளிட்ட பல படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் ப்ரியா பவானி சங்கர். இப்போது கரோனா ஊரடங்கினால் எந்தவொரு படத்தின் பணியும் இல்லை என்பதால் வீட்டில் குடும்பத்தினருடன் நேரத்தைச் செலவழித்து வருகிறார்.
'மான்ஸ்டர்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, எஸ்.ஜே.சூர்யா - ப்ரியா பவானி சங்கர் இருவரும் காதலித்து வருவதாகச் செய்திகள் பரவின. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தனது காதலர் ராஜின் பிறந்த நாளுக்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து ப்ரியா பவானி சங்கர் தொடர்பான காதல் செய்திகள் அனைத்துமே அடங்கின.
சுமார் ஒரு வாரத்துக்கு முன்பு சித்ரா பெளர்ணமி இரவு அன்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டார் ப்ரியா பவானி சங்கர். அந்தப் பதிவினால் காதல் தோல்வி வதந்தியில் சிக்கியுள்ளார். அந்தப் பதிவில் ப்ரியா பவானி சங்கர் கூறியிருப்பதாவது:
"சித்ரா பௌர்ணமி இரவு!
போன வருஷம் இதே நாள், ‘கிரிவலம் போனா, மூணு மாசத்துல வேண்டிக்கிட்டத கடவுள் கண்டிப்பா குடுப்பார்’னு நண்பர் சொன்னத நம்பி மனசு நிறைய ஒரே வேண்டுதலை சுமந்துகிட்டு இரவோட இரவா பௌர்ணமிய தொரத்திக்கிட்டு திருவண்ணாமலை போனேன். கடவுள் கேட்டத குடுக்கலனாலும் பரவாயில்லை கிழித்து என் முகத்துலயே எறிந்து கை தட்டி சிரித்தார். ஒரு வருஷம் எப்படி போச்சுன்னே தெரியல. மனிதர்களையும் அவர் குணங்களையும் நாம் பிடிவாதமாகப் பார்க்க மறுத்த கோணத்தில் காலம் காட்டியது.
ரெண்டு சித்ரா பௌர்ணமிக்கு இடையே வாழ்க்கை மட்டுமல்ல உலகமே மாறிடுச்சு.நான் மட்டும் இல்ல, உலகமே தனிமையில். ஏனோ கிடைத்த கைகளைப் பற்றிக்கொண்டு கிடைத்த தோளில் ஒட்டிக்கொண்டு அவசரமாக அடுத்த வாழ்க்கைக்குத் தயாராக இந்தத் தனிமை தூண்டவில்லை. தனிமையில் நிற்க நமக்கு ஏன் இவ்வளவு பயம்? பதற்றம்? கேட்டதைத் தராமல் நல்லதைத் தந்த கடவுள் மேலயும் சித்ரா பௌர்ணமி மேலயும் கோவம் குறைஞ்சு தனிமையின் வெளிச்சத்தில் நிதானமாக தெளிவாக, எந்த எதிர்ப்பும் இன்றி, கிடைத்ததே என்று எந்தப் பிடிப்புமின்றி நான். கிரிவலம் போகாமல், முன் எப்பொழுதையும் விட அமைதியாக தனிமையின் கம்பீரத்தோடு என் வீட்டு மாடியில் சித்ரா பௌர்ணமி.
மாற்றங்கள் தரும் வலிகள் பழகக்கூடும்
வலித்து மரத்து அடங்கிய பின் வரும் தெளிவு அழகு"
இவ்வாறு ப்ரியா பவானி சங்கர் தெரிவித்திருந்தார்.
இந்தப் பதிவை வைத்து பலரும் ப்ரியா பவானி சங்கர் தனது நீண்ட நாள் காதலரான ராஜைப் பிரிந்துவிட்டார் என்று செய்திகளை வெளியிட்டுள்ளனர். இது தொடர்பாக ப்ரியா பவானி சங்கர் தரப்பில் விசாரித்தோம்.
"ப்ரியா பவானி சங்கர் - ராஜ் இருவருமே நீண்ட நாட்கள் நண்பர்களாக இருந்து காதலர்களாக மாறியவர்கள். இருவரது குடும்பத்தினரும் நெருங்கிய நட்பு பாராட்டி வருகிறார்கள். ஆகையால் இருவருக்குள் சண்டை வருவதற்கு வாய்ப்பே இல்லை. சித்ரா பெளர்ணமி அன்று அவர் வெளியிட்ட பதிவில், இறுதி வார்த்தைகள் அவருக்கு ரொம்பப் பிடித்திருப்பதால் வெளியிட்டார். அதை வைத்து இவ்வளவு கதைகள் வரும் என்று நினைத்திருந்தால், அந்தப் பதிவை போட்டிருக்கவே மாட்டார்.
தற்போது கூட ப்ரியா பவானி சங்கர் - ராஜ் இருவருமே காதலித்துதான் வருகிறார்கள். ஒரு பதிவை வைத்து இவ்வளவு செய்திகள் எழுதலாமா என்று கூட ப்ரியா பவானி சங்கர் சிரித்தார். அதே போல், அவருக்கு ட்விட்டர் தளத்தில் கணக்கு கிடையாது. பலரும் அதில் வரும் பதிவை வைத்து செய்திகள் வெளியிடுகிறார்கள். அவர் இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக் ஆகியவற்றில் மட்டுமே இருக்கிறார்".
இவ்வாறு ப்ரியா பவானி சங்கர் தரப்பு தெரிவித்தது.