யார் என்ன சொன்னாலும் கவலைப்பட்டதில்லை என்று கனிகா தனது இன்ஸ்டாகிராம் பதிவில் தெரிவித்துள்ளார்.
'ஃபைவ் ஸ்டார்' படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானவர் கனிகா. அதனைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். டப்பிங் கலைஞராகவும், பாடகியாகவும் கனிகா பணிபுரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
2008-ம் ஆண்டு ஷ்யாம் ராதாகிருஷ்ணன் என்ற பொறியாளரைத் திருமணம் செய்து அமெரிக்காவில் குடியேறினார் கனிகா. இருவருக்கும் ஒரு மகன் இருக்கிறார். குழந்தைப் பிறந்த பிறகும் திரையுலகில் கவனம் செலுத்தி வருகிறார் கனிகா.
உடல் எடை அதிகரித்தது குறித்தும், உடற்பயிற்சி எவ்வளவு அவசியம் என்பது குறித்து இன்ஸ்டாகிராம் பதிவில் புகைப்படத்துடன் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
"ஆம், எனக்குப் பிறந்த குழந்தையின் எடை அதிகமாக இருந்தது. நான் கர்ப்பமாக இருக்கும்போதே எனது வயறு வழக்கத்தை விட பெரியதாக இருந்தது, அதைப் பற்றி நான் பெருமிதத்துடன் இருந்தேன். மற்ற அம்மாக்களுக்கு இருந்ததைப் போல பிரசவத்துக்குப் பின் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கவில்லை.
ஏனென்றால் என் குழந்தைக்குப் பிறந்தவுடனேயே இதயத்தில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அற்புதங்கள் நடக்கும். எனது குட்டி மகன் ஒரு போராளி. அவன் வாழ்வைத் தேர்ந்தெடுத்தான். ஆனால் இந்தப் பதிவு அதைப் பற்றியதல்ல. நான் எப்படி மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பினேன் என்பது பற்றி. நான் ஒரு எளிய விதியை பின்பற்றினேன்.
உங்கள் வாழ்க்கை, உங்கள் உடல், உங்கள் உரிமை.
எனது தோற்றம், நான் குழந்தை வளர்க்கும் முறை பற்றி யார் என்னை சொன்னாலும் இன்றுவரை அதைப் பற்றி நான் கவலைப்பட்டதில்லை. நான் நினைத்ததைச் சாதிக்க அமைதியாக முயற்சித்துக் கொண்டிருந்தேன்.
இன்று கூட பலரும் ஏன் நான் உடற்பயிற்சியை விடாமல் செய்கிறேன் என்று நினைக்கலாம், கேட்கலாம். திரைப்பட வாய்ப்புகளுக்காக என்று கூட பலர் நினைக்கலாம். ஆனால் உண்மை அது கிடையாது. நான் எனக்காக இதைச் செய்கிறேன். எனது ஆரோக்கியமான எதிர்காலத்துக்கு இது எனது முதலீடு. அதனால் அனைவரும் ஆரோக்கியமான உணவை உண்ணுங்கள்,ஆரோக்கியமாக இருங்கள்.
ஆரோக்கியமான எதிர்காலம் இன்று உங்கள் கைகளில் உள்ளது. அதிகபட்சம் ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் போதும். நீங்கள் கண்டிப்பாக மதிப்பு மிக்கவர், அதனால் உங்களுக்கு நல்ல ஆரோக்கியத்தை நீங்களே பரிசளியுங்கள். என்னால் செய்ய முடியுமென்றால் உங்களால் ஏன் முடியாது?"
இவ்வாறு கனிகா தெரிவித்துள்ளார்.