தமிழ் சினிமா

பேய் சீஸன் படங்களுக்கு 'விசில்' ஒரு ஆரம்பப் புள்ளி: இயக்குநர்கள் ஜேடி - ஜெர்ரி பகிர்வு

செய்திப்பிரிவு

இப்போது வரும் பேய் சீஸன் படங்களுக்கு விசில் ஒரு ஆரம்பப் புள்ளியாக இருந்தது என்று இயக்குநர்கள் ஜேடி - ஜெர்ரி தெரிவித்துள்ளனர்.

விளம்பரப் படவுலகில் முக்கியமான இயக்குநர்கள் ஜேடி-ஜெர்ரி. சரவணா ஸ்டோர்ஸ் தொடங்கி பல்வேறு முன்னணி நிறுவனங்களின் விளம்பரங்கள் அனைத்துமே இவர்களுடைய இயக்கம். வெள்ளித்திரையிலும் 'உல்லாசம்' மற்றும் 'விசில்' ஆகிய படங்களை இயக்கியுள்ளனர்.

தற்போது சரவணா ஸ்டோர்ஸ் அதிபர் சரவணன் அருள் நாயகனாக நடிக்கும் புதிய படத்தை ஜேடி - ஜெர்ரி இயக்கி வந்தார்கள். ஆனால், கரோனா அச்சுறுத்தலால் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தற்போது படப்பிடிப்பு எதுவுமே இல்லை என்பதால், தங்களுடன் பழகிய நண்பர்கள், பணிபுரிந்த படங்கள் குறித்த நினைவலைகளை சமூக வலைதளத்தில் பகிர்ந்து வருகிறார்கள்.

இதில் 'விசில்' படம் உருவான விதம் தொடர்பாக சில புகைப்படங்களை வெளியிட்டு, இயக்குநர்கள் ஜேடி-ஜெர்ரி கூறியிருப்பதாவது:

"அதிரடியாய், ஒரு குறுகிய காலப் படைப்பாக, கட்டுப்பாடான பட்ஜெட்டில் ஒரு படம் பண்ண வேண்டும் என்றுதான் எங்களுக்கு இந்தப் படம் வந்தது. மீடியா ட்ரீம்ஸ் தயாரிப்பு நிறுவனத்தால் கொடுக்கப்பட்டது. அதேபோல் 43 நாள் ஒரே கட்டமாக ரூ.1.25 கோடி பட்ஜெட்டில் படம் எடுத்தோம்.

காயத்ரி, ஷெரின் தவிர நிறைய இளைய புதுமுகங்கள். விக்ரமாதித்யா, ஜீத்து, ஐரின், கார்த்திக். வைஷ்ணவி என்று நிறையப் பேரை அறிமுகப்படுத்திதினோம். டிடிக்கும் கூட இது தான் முதல் படம் என்று நினைக்கிறேன்.

இவர்களோடு அனுபவம் வாய்ந்த மனோரமா ஆச்சி, விவேக், செந்தில், லிவிங்ஸ்டன், பானுசந்தர், ராஜ்கபூர் என்று மூத்த நடிகர்களோடும் வேலை செய்ய முடிந்தது.

ஒரு ஆங்கிலப் படத்தின் தாக்கத்தில், கல்லூரி வளாகத்தில் நடக்கும் த்ரில்லராக இந்தக் கதை உருவாகி இருந்தாலும் நம் மண் சார்ந்த விஷயங்களை மூலப் பொருளாக்கினோம். காவ்யா சண்முகசுந்தரம் தொகுத்த நாட்டுப்புறக் கதைகளிலிருந்து நாகம்மாள் கதையை எடுத்தோம். ஐந்து சகோதரர்களோடு பிறந்த அழகான தங்கையை ஒரு வெள்ளைக்காரன் விரும்பினான் என்பதற்காக அவளின் சகோதர்களே அவளை மண்ணைத் தோண்டிப் புதைக்கின்றனர். பிறகு அவள் தெய்வமாக்கப்படுகிறாள். இதுதான் விசிலின் அடி நாதம். அதோடு ராகிங் குறித்து ஒரு எதிர்ப்புக் குரலையும் பதிவு செய்தோம்.

வயது வந்தவர்களுக்கு மட்டும் என கி.ராஜநாராயணன் எழுதிய கதை ஒன்று உள்ளது. 'வெத்தலைக்கு பெண் வாசம் எப்படி வந்தது' என்ற அந்தக் கதையை ஒரு பாடலுக்கு கருப் பொருளாக்கினோம். அழகிய அசுராவை அனிதா உதிப் பாட, நட்பே நட்பேவை சிம்புவும், ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் பாடினார்கள். டி இமான் இசையில் பவுஸியா பாத்திமா படத்தின் ஒளிப்பதிவாளர்.

பி.சி.ஸ்ரீராம் பட்டறையில் பட்டை தீட்டப்பட்ட எந்த வைரம்தான் சோடை போகும் .. ஒரு த்ரில்லர் படத்திற்கே உரிய வினோத கோணங்களில் படமாக்கினோம். சுஜாதா சார் (வசனம்), நாகு, சுரேஷ் அர்ஸ், பிருந்தா மாஸ்டர், கனல் கண்ணன் என்று ஒரு பலமான அணி. விசில் ஜூலை 4, 2003 வெளியானது.

இப்போது வரும் பேய் சீஸன் படங்களுக்கு 'விசில்' ஒரு ஆரம்பப் புள்ளியாக இருந்தது"

இவ்வாறு இயக்குநர்கள் ஜேடி-ஜெர்ரி தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT