‘பொன்மகள் வந்தாள்’ தொடரில் நடித்த விக்கி - மேக்னா திருமணச் செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சின்னத்திரையில் ‘வாணி ராணி’, ‘இளவரசி’, ‘பொன்மகள் வந்தாள்’ உள்ளிட்ட தொடர்களில் நடித்த விக்கி, நடிகை ஹரிப்ரியாவை கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்தார். தற்போது இவர்களுக்கு ஒரு மகனும் உள்ளார்.
‘கயல்’ திரைப்படம், ‘தெய்வம் தந்த வீடு’ உள்ளிட்ட சில சீரியல்கள் வழியே தமிழுக்கு வந்த மேக்னாவுக்கு பூர்வீக பூமி கேரளா. இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு டான் டோனி என்ற தொழிலதிபரைத் திருமணம் செய்திருந்தார். இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சமீபத்தில் விவாகரத்து பெற்றுள்ளனர்.
இந்த சூழ்நிலையில் ’பொன்மகள் வந்தாள்’ தொடரில் நாயகன் - நாயகியாக நடித்த காலகட்டத்தில் இருந்தே விக்கி - மேக்னா இருவரும் திருமணம் செய்துகொள்ளப் போவதாக தகவல்கள் கசிந்து வந்தன. தற்போது மேக்னா விவாகரத்து பெற்றுள்ள சூழலில் விரைவில் விக்கியும் அவரது மனைவி ஹரிப்பிரியாவிடம் விவாகரத்து பெற உள்ளார். அது முடிவுக்கு வந்ததும் இருவருக்கும் திருமணம் என சமூக வலைதளங்களில் வைரலானது.
நடந்தது என்ன? என ‘பொன்மகள் வந்தாள்’ தொடர் நாயகன் விக்கியிடம் பேசினோம்.
‘‘கடந்த சில மாதங்களாகவே இப்படி ஒரு வதந்தி பரவி வருகிறது. ஒரு சீரியலில் நாயகன் - நாயகியாக இருவர் இணைந்து நடித்தால் உடனே அவர்கள் நிஜத்தில் திருமணம் செய்துகொள்ளப் போகிறார்கள் என்று பேசத் தொடங்குகின்றனர்.
எல்லோர் குடும்பத்திலும் சிறு சிறு சண்டைகள் இருக்கத்தான் செய்யும். நடிகர்கள் குடும்பமும் அதற்கு விதிவிலக்கல்ல. நானும், மேக்னாவும் நல்ல நண்பர்கள். இது தொடர்பாக சில மாதங்களுக்கு முன்பே இருவரும் சேர்ந்து தெளிவாகக் கருத்து கூறியிருந்தோம். அதை எனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடவும் செய்தேன். இப்போதும் அதே நிலைப்பாட்டில்தான் இருக்கிறேன்.
எனக்கு 6 வயதில் ஒரு மகன் இருக்கிறான். அவனது எதிர்காலத்தையும் நான் யோசிக்க வேண்டும். தேவையில்லாமல் எங்கள் வாழ்க்கையைச் சீர்குலைக்காதீர்கள். கரோனா நேரத்தில் எல்லோரும் பாதுகாப்பாக இருப்பது பற்றி யோசிக்கலாம். இதுபோன்ற தேவையில்லாத வதந்தியை யாரும் நம்ப வேண்டாம்!’’
இவ்வாறு விக்கி தெரிவித்தார்.