பிச்சை எடுத்தாலும், கடன் வாங்கினாலும் பகிர்ந்து கொடுப்பேன் என்று பிரகாஷ்ராஜ் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கரோனா அச்சுறுத்தல் தொடங்கிய காலத்திலேயே, தனது பணியாளர்கள் அனைவருக்கும் மே மாதம் வரை சம்பளம் கொடுத்து விடுமுறை அளித்தார் பிரகாஷ்ராஜ். இது தொடர்பாக அவருக்குப் பாராட்டுகள் குவிந்தது. இதனைத் தொடர்ந்து தனது பண்ணை வீட்டில், வீடின்றி தவித்துக் கொண்டிருந்த கூலிப் பணியாளர்களுக்குத் தங்க இடமளித்தார். மேலும், அவர்களுடைய குடும்பத்துக்குப் பணம் உதவியும் செய்தார்.
கரோனா அச்சுறுத்தல் அதிகரிக்கத் தொடங்கவே, தனது பிரகாஷ்ராஜ் அறக்கட்டளை மூலம் பல்வேறு உதவிகளைச் செய்யத் தொடங்கினார். பல்வேறு இடங்களுக்குச் சென்று நலிவடைந்த குடும்பங்களுக்கு அரிசி, மளிகைப் பொருட்கள் உள்ளிட்டவற்றைக் கொடுத்தனர். இது தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
தற்போது புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பலரும் அவர்களுடைய சொந்த ஊருக்கு நடந்தே செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அவ்வாறு நடந்துச் சொல்வோருக்கு பிரகாஷ்ராஜ் அறக்கட்டளை சார்பில் உணவு, தண்ணீர் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது.
இது தொடர்பான புகைப்படங்களை தனது சமூக வலைதள பதிவில் பகிர்ந்து பிரகாஷ்ராஜ் கூறியிருப்பதாவது:
"நான் பிச்சையெடுத்தாலும், கடன் வாங்கினாலும், ஆனால் என்னைத் தாண்டி நடந்து செல்லும் என் சக குடிமகன்களுக்குத் தொடர்ந்து பகிர்ந்து கொடுப்பேன். அதை அவர்கள் எனக்குத் திருப்பி கொடுக்காமல் இருக்கலாம். ஆனால் கடைசியாக தங்கள் வீட்டை அடையும்போது அவர்கள் 'எங்கள் வீட்டை அடைய நம்பிக்கையும் வலிமையும் கொடுத்த ஒரு மனிதனை நாங்கள் சந்தித்தோம் என்று கூறுவார்கள். வாழ்வுக்கு மீண்டும் உயிர் கொடுப்போம்"
இவ்வாறு பிரகாஷ்ராஜ் தெரிவித்துள்ளார்.