பிறந்து பத்து மாதங்கள் ஆன தனது பெண் குழந்தையின் வீடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ள நடிகை சமீரா ரெட்டி, தனது மகளை நடிகர் ரஜினிகாந்துடன் நகைச்சுவையாக ஒப்பிட்டுள்ளார்.
தமிழ், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சமீரா ரெட்டி. கெளதம் மேனன் இயக்கத்தில் சூர்யாவுக்கு நாயகியாக இவர் நடித்த 'வாரணம் ஆயிரம்' தமிழில் பெரும் வரவேற்பைப் பெற்றது. 2014-ம் ஆண்டு அக்ஷய் வரதே என்பவரை திருமணம் செய்துக் கொண்டார்.
அக்ஷய் வரதே - சமீரா ரெட்டிக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் தனது குழந்தையின் புகைப்படங்கள், வீடியோக்கள் என்று பகிர்ந்து வரும் நடிகை சமீரா ரெட்டி சமீபத்தில் ஒரு வீடியோவைப் பகிர்ந்திருக்கிறார்.
இதில் அவரது குழந்தை நைரா, கையில் கருப்புக் கண்ணாடியை எடுத்து வைத்து மீண்டும் அணிவது போல படமாக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோவோடு சேர்ந்து நடிகர் ரஜினிகாந்த் திரைப்படங்களில் கண்ணாடி அணியும் காட்சிகளையும் சேர்த்து, பின்னணியில் 'தர்பார்' பட இசையைச் சேர்த்து இந்த வீடியோவை சமீரா பகிர்ந்துள்ளார்.
இதோடு சேர்த்து, "மாஸ் பேபி, பேபி தலைவா. ரஜினிகாந்த், சூப்பர் ஸ்டார். சும்மா பேரை கேட்டா அதிருதுல்ல" என்று குறிப்பிட்டுள்ளார்.