ஜி.வி. பிரகாஷ், காயத்ரி சுரேஷ் நடிப்பில் உருவாகி வந்த '4G' திரைப்படத்தின் இயக்குநர் அருண் பிரசாத் சாலை விபத்தில் உயிரிழந்தார்.
இயக்குநர் ஷங்கரிடம் 'ஐ' படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர் அருண் பிரசாத். ஜி.வி. பிரகாஷை நாயகனாக வைத்து '4G' என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். படத்துக்காக தனது பெயரை வெங்கட் பக்கர் என்று மாற்றியிருந்தார். சி.வி.குமார் தயாரிப்பில் வேல்ராஜ் ஒளிப்பதிவு, ஜி.வி.பிரகாஷ் இசை என இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிகட்டப் பணிகள் நடந்து வந்தன.
ஊரடங்கின் காரணமாக மேட்டுப்பாளையம் அருகில் இருக்கும் அன்னூரில் இருந்தார் அருண். இன்று (15.05.20) காலை தனது பைக்கில் சென்றுகொண்டிருந்தபோது சாலையின் எதிர்ப்புறம் வந்த டிப்பர் லாரி மோதி சம்பவ இடத்திலேயே அருண் உயிரிழந்தார். அவருக்கு இன்னும் திருமணமாகவில்லை.
அருணின் மரணம் தமிழ்த் திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவரது மறைவுக்கு சினிமா பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.