'மறுபடியும்' படத்தின் 'ஆசை அதிகம் வைச்சு' பாடல் உருவான விதம் குறித்து ரோகிணி அவரது யூடியூப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
1993-ம் ஆண்டு பாலு மகேந்திரா இயக்கத்தில் வெளியான படம் 'மறுபடியும்'. ரேவதி, நிழல்கள் ரவி, அரவிந்த்சாமி, ரோகிணி உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைத்திருந்தார். இந்தப் படத்தில் 'ஆசை அதிகம் வைச்சு' என்ற பாடல் மிகவும் பிரபலம்.
அதன் நடன அமைப்புகள், படமாக்கிய விதம் உள்ளிட்டவை இப்போதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தப் பாடலில் நடனமாடிய ரோகிணி, அதன் உருவாக்கம் குறித்து அவரது யூ-டியூப் சேனலில் பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் பேசியிருப்பதாவது:
"கலா மாஸ்டர் நடனப் பள்ளியில் காலை 7 மணியிலிருந்து 11 மணி வரை தொடர்ச்சியாக நடனம் பயின்று வந்தேன். அப்போது தான் இந்தப் பாடல் படப்பிடிப்பு இருந்தது. படப்பிடிப்புக்குச் செல்வதற்கு முன்பே இந்தப் பாடல் வந்தது. கேட்டவுடனே அந்தப் பாடலின் பீட் ரொம்பவே பிடித்துவிட்டது. சென்னை டூ கோயம்புத்தூர் டூ ஊட்டி என பயணப்படும் போது அந்தப் பாடலை மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டே இருந்தேன்.
அந்தப் பாடலுக்கு சிவசங்கர் மாஸ்டர் தான் நடன அமைப்பு. அவர் முழுமையாக நடன அமைத்துவிட்டார். அந்தப்பாடலுக்கு இடையே சில இடங்களில் அமர்ந்திருப்பேன். அதெல்லாமே பாலு மகேந்திரா சாருடைய ஐடியா தான். 2 நாட்களில் படப்பிடிப்பு செய்யப்பட்ட பாடல் அது. காலை 7 மணிக்கு தொடங்கி 11:30 மணி வரைக்கும், பின்பு மாலை 3 மணிக்கு தொடங்குவோம். அப்படி படப்பிடிப்பு செய்தும் 2 நாட்களில் முடித்துவிட்டோம்.
படம் வெளியான சமயத்தில் தான் தொலைகாட்சிகள் அதிகமான காலம். அந்தப் பாடல் மீண்டும் மீண்டும் அதில் ஒளிபரப்பபட்டன. 'ஆசை அதிகம் வைத்து' பாடலும், 'சின்ன ராசாவே கட்டெறும்பு' பாடலும் ரொம்பவே பிரபலம். 12 கல்லூரிகள் பங்கேற்ற நடன விழா ஒன்றுக்கு ஜட்ஜ் ஆகப் போயிருந்தேன். அதில் 11 கல்லூரிகள் 'ஆசை அதிகம் வைத்து' பாடலுக்கு நடனமாடியிருந்தார்கள்.
அந்தப் பாடலுக்கான உடைகள் எல்லாம் மும்பையிலிருந்து வரவைத்தேன். சிவப்பு, ப்ளூ உள்ளிட்ட டார்க் கலர்கள் பாலு சாருக்கு பிடிக்காது. ஆனால், அந்தப் படத்தில் நான் நடிகை என்பதால் அவரிடம் எடுத்துச் சொல்லி அந்தக் கலர் உடைகளை உபயோகித்தேன். அவரது வேறு எந்தவொரு படத்திலுமே அந்தக் கலர்களை நீங்கள் பார்த்திருக்க மாட்டீர்கள்"
இவ்வாறு ரோகிணி தெரிவித்துள்ளார்.