தமிழ் சினிமா

'அண்ணாத்த' வெளியீடு மாற்றம்: சன் பிக்சர்ஸ் அறிவிப்பு

செய்திப்பிரிவு

ரஜினி நடித்து வரும் 'அண்ணாத்த' படத்தின் வெளியீட்டில் மாற்றம் செய்து சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது.

'தர்பார்' படத்தைத் தொடர்ந்து, சிவா இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்கத் தேதிகள் ஒதுக்கினார் ரஜினி. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் கடும் கட்டுப்பாடுகளுடன் தொடங்கியது.

'அண்ணாத்த' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், நயன்தாரா, சூரி, சதீஷ் உள்ளிட்ட பலர் ரஜினியுடன் நடித்துள்ளனர். கரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தப் படத்தின் படப்பிடிப்பு தடைப்பட்டுள்ளது.

இதனிடையே, கரோனா அச்சுறுத்தலுக்கு முன்பு வரை அக்டோபர் மாத வெளியீடாக திரைக்குக் கொண்டு வரத் திட்டமிட்டது சன் பிக்சர்ஸ் நிறுவனம். ஆனால், கரோனா அச்சுறுத்தலால் இப்போது அனைத்துப் படங்களின் வெளியீட்டிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

பல தயாரிப்பாளர்கள் நிலைமை எப்போது சரியாகும் என்று ஆலோசனை செய்து வரும் வேளையில், சன் பிக்சர்ஸ் நிறுவனமோ 'அண்ணாத்த' படம் 2021-ம் ஆண்டு பொங்கல் வெளியீடாக திரைக்கு வரும் என அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

அடுத்தகட்டப் படப்பிடிப்பு கரோனா அச்சுறுத்தல் முடிந்தவுடன் ஹைதராபாத்தில் தொடங்கவுள்ளது.

SCROLL FOR NEXT