தமிழ் சினிமா

தமிழ்த் திரையுலகினருக்கு ஹரிஷ் கல்யாண் வேண்டுகோள்

செய்திப்பிரிவு

சம்பளக் குறைப்பு தொடர்பாக தமிழ்த் திரையுலகினருக்கு ஹரிஷ் கல்யாண் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கரோனா ஊரடங்கால் சினிமா படப்பிடிப்புகள் பாதியில் நிறுத்தப்பட்டு, திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. இதனால் திரைப்படத் தயாரிப்பாளர்கள் பலருக்கு நஷ்டம் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு விஜய் ஆண்டனி, ஹரிஷ் கல்யாண், அருள்தாஸ், ஹார்த்தி மற்றும் இயக்குநர் ஹரி உள்ளிட்டோர் சம்பளக் குறைப்பு தொடர்பாக அறிவித்துள்ளனர்.

மேலும் முன்னணி நடிகர்கள் பலரும் சம்பளத்தைக் குறைப்பார்கள் என தயாரிப்பாளர்கள் எதிர்நோக்கியுள்ளனர். தற்போது இது தொடர்பாக ஹரிஷ் கல்யாண் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

"கரோனா சூழல் கருதி நடிகர் விஜய் ஆண்டனி அவர்கள் 25% சம்பளத்தைக் குறைக்கப் போவதாக சமீபத்தில் பத்திரிகையில் தெரிவித்திருந்தார். தயாரிப்பாளர்கள் நலன் கருதி அவர் எடுத்திருக்கும் இந்த முடிவு ரொம்ப ஆரோக்கியமானது. நானும் அதை பின்பற்றி, எனது சம்பளத்தில் 20% குறைக்கப் போவதாக தெரிவித்துள்ளேன். நான் ஒன்றும் பெரிய சம்பளம் வாங்குகிற பெரிய ஹீரோ எல்லாம் கிடையாது.

என்னை வைத்து படம் எடுக்கிற தயாரிப்பாளர்களுக்கு ஏதோ ஒரு வகையில் உதவியாக இருக்கும் என நான் நம்புகிறேன். தொடர்ச்சியாக இயக்குநர் ஹரியும் தனது சம்பளக் குறைப்பு தொடர்பாகப் பத்திரிகையில் தெரிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து அனைவருமே முன்னுக்கு வந்தால் ரொம்பவே நல்ல விஷயமாக இருக்கும் என நினைக்கிறேன்.

தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் என தொடங்கி இந்த உலகத்தில் உள்ள அனைத்து மக்களும் விரைவில் இயல்பு நிலைக்குத் திரும்ப வேண்டும் என இறைவனிடம் கேட்டுக் கொள்கிறேன்"

இவ்வாறு ஹரிஷ் கல்யாண் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT