தமிழ் சினிமா

‘மாஸ்டர்’ பாடலை வாசித்த மாற்றுத்திறனாளி ரசிகர்: அனிருத் பாராட்டு

செய்திப்பிரிவு

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மாஸ்டர்'. ஏப்ரல் 9-ம் தேதி வெளியாகியிருக்க வேண்டிய படம் கரோனா ஊரடங்கால் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தற்போது படத்தின் பணிகள் அனைத்தையும் முடித்து வெளியீட்டுக்குத் தயாராக வைத்துள்ளது படக்குழு.

அனிருத் இசையில் இப்படத்தின் பாடல்கள் கடந்த மார்ச் மாதம் வெளியானது. ‘வாத்தி கமிங்’, ‘குட்டி ஸ்டோரி’ ஆகிய பாடல்கள் சமூக வலைதளங்களில் பெரும் வைரலானது.

கடந்த சில தினங்களுக்கு முன் கைகளை இழந்த மாற்றுத்திறனாளி ஒருவர் ‘வாத்தி கமிங்’ பாடலின் இசையை வாசிக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவியது. ரசிகர்கள் பலரும் அந்த வீடியோவை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து வந்தனர்.

இந்நிலையில் அந்த வீடியோவை இசையமைப்பாளர் அனிருத் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தார். மேலும், ''அட்டகாசம், அற்புதமான அசலான திறமை. கடவுள் உங்களை ஆசிர்வதிக்கட்டும் சகோதரா''என்று பாராட்டினார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு ‘விஸ்வாசம்’ படத்தில் இடம்பெற்ற ‘கண்ணான கண்ணே’ பாடலை பாடி சமூக வலைதளங்களில் வைரலான கண் பார்வையற்ற மாற்றுத்திறனாளி ஒருவருக்கு தான் இசையமைத்த ‘சீறு’ படத்தில் பாட இசையமைப்பாளர் டி. இமான் வாய்ப்பளித்தது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT