தமிழ் சினிமா

கிண்டலுக்கும் அப்பாவி குடிமகன்களுக்கும் இடையே அரசாங்கம் பிதுங்கிக் கொண்டிருக்கிறது: எஸ்.ஆர்.பிரபு

செய்திப்பிரிவு

கிண்டலுக்கும் அப்பாவி குடிமகன்களுக்கும் இடையே அரசாங்கம் பிதுங்கிக் கொண்டிருக்கிறது என்று தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கரோனா அச்சுறுத்தல் தொடங்கியதிலிருந்தே வெள்ளித்திரை, சின்னத்திரை சம்பந்தப்பட்ட எந்தவொரு படப்பிடிப்புமே நடைபெறவில்லை. மேலும், இறுதிக்கட்டப் பணிகளும் எதுவுமே நடைபெறவில்லை. இதனால் திரைத்துறையினருக்குப் பல கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

தற்போது தொழில்துறையினருக்குப் பல்வேறு விதிமுறைகளுடன் தொழில் தொடங்க அனுமதியளித்துள்ளது தமிழக அரசு. இதேபோன்று படங்களின் இறுதிக்கட்டப் பணிகளையும், சின்னத்திரை படப்பிடிப்புகளை நடத்த அனுமதி வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு தயாரிப்பாளர்களும், பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணியும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதனிடையே, இன்று (மே 4) முதல் ஊரடங்கில் சில தளர்வுகளையும் கொண்டு வந்தது தமிழக அரசு. இது தொடர்பாக தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தனது சமூக வலைதள பதிவில் "இன்று முதல் வெளியே செல்வது குறித்து மகிழ்ச்சியடையும் அனைவரும் ஒன்றை நினைவில் கொள்ளுங்கள். நாம் இன்னும் எண்ணிக்கையில் அதிகமாகிக் கொண்டிருக்கிறோம். ஆம், ஒவ்வொருவரும் அவரவர் குடும்பத்தினருக்காகச் சம்பாதிக்க வேண்டும்தான். ஆனா ஒருவருடைய அறியாமை இன்னொருவரின் உயிரைப் பறித்துவிடக் கூடாது. அனைவரும் கவனமாகவும் பாதுகாப்பாகவும் இருக்கவும்" என்று தெரிவித்துள்ளார்.

மேலும், காலை முதலே ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் டாஸ்மாக் கடைகள் திறந்தவுடன், வரிசையில் நின்ற பொதுமக்கள் கூட்டம் குறித்து தான் சமூக வலைதளத்தில் பேச்சாக இருக்கிறது. தமிழக அரசும் மே 7-ம் தேதி முதல் டாஸ்மாக் திறக்கப்படும் என அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தனது சமூக வலைதள பதிவில் கூறியிருப்பதாவது:

"கிண்டலுக்கும் அப்பாவி குடிமகன்களுக்கும் இடையே அரசாங்கம் பிதுங்கிக் கொண்டிருக்கிறது. என்னைச் சுற்றிலும் சோகக் கதையையோ, நகைச்சுவை கதையையோ பார்க்கிறேன். இந்த வைரஸை எதிர்க்கக் கூட்டு முயற்சியே தேவை. ஊரடங்கு பசிக்கு வழிவகுக்கும். அதை தளர்த்துவது தொற்றைப் பரவலாக்கும். இந்த தீயில் ஓடிக்கொண்டிருக்கும் என்எச்எஸ் மற்றும் காவலர்களுக்காக நான் பிரார்த்தனை செய்கிறேன்"

இவ்வாறு எஸ்.ஆர்.பிரபு தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT