தமிழ் சினிமா

மீண்டும் விஜய் படத்தை இயக்குவதாக வதந்தி: சுதா கொங்கரா விளக்கம்

செய்திப்பிரிவு

மீண்டும் விஜய் படத்தை இயக்கவுள்ளதாக வதந்தி பரவியதைத் தொடர்ந்து இயக்குநர் சுதா கொங்கரா விளக்கமளித்துள்ளார்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மாஸ்டர்'. கரோனா அச்சுறுத்தலால் இந்தப் படத்தின் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இந்த அச்சுறுத்தல் நிறைவு பெற்ற பிறகே வெளியீடு எப்போது முடிவு செய்யப்படும் என படக்குழுவினர் தெரிவித்தார்கள்.

இந்தப் படத்துக்குப் பிறகு நடிக்கக் கூடிய படத்துக்காக பல்வேறு இயக்குநர்களிடம் கதைகள் கேட்டார் விஜய். இதில் பாண்டிராஜ், சுதா கொங்கரா உள்ளிட்ட பலரும் அடங்கும். இதில் சுதா கொங்காரா படத்தில் விஜய் நடிப்பதாக இருந்தது. ஆனால், இறுதிக்கட்டப் பேச்சுவார்த்தையில் படம் அடுத்த கட்டத்துக்கு நகரவில்லை. தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ளது உறுதியாகியுள்ளது.

இதனிடையே, இன்று (மே 4) காலை சுதா கொங்கரா பெயரில் உருவாகி வரும் போலி ட்விட்டர் தளத்தில் "ஜூன் 22-ம் தேதி எனது படத்தைப் பற்றி அறிவிக்கிறேன்" என்று பதிவிட்டனர். ஜூன் 22-ம் தேதி விஜய் பிறந்த நாள் என்பதால், சமூக வலைதளத்தில் பலரும் விஜய் - சுதா கொங்கரா கூட்டணி முடிவாகிவிட்டது என கருதத் தொடங்கினார்கள்.

இதனால் ஏற்பட்ட குழப்பத்தைத் தீர்க்க சுதா கொங்கரா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

"நான் ட்விட்டரிலோ வேறு எந்த சமூக வலைதளத்திலோ இல்லை. நான் அவற்றில் வரும்போது அதிகாரபூர்வமாக அதை அறிவிப்பேன். எனவே போலி ஐடிக்களைக் கண்டுகொள்ளவேண்டாம். அவற்றைப் பின்தொடர்ந்து உங்கள் நேரத்தை வீணடிக்காதீர்கள். பாதுகாப்பாக வீட்டில் இருங்கள். உங்களுக்குப் பிடித்தவற்றை வீட்டிலிருந்து செய்யுங்கள். இந்தக் கொடூரமான வைரஸுக்கு பிறகான வாழ்க்கையின் மறுபக்கத்தை எதிர்நோக்கியிருங்கள்".

இவ்வாறு சுதா கொங்கரா தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT