1963-ம் ஆண்டிலிருந்து 1970-ம் ஆண்டு வரை படங்களில் நடிக்காதது ஏன் என்ற கேள்விக்கு கமல் பதிலளித்துள்ளார்.
கரோனா அச்சுறுத்தலால் பிரபலங்கள் அனைவருமே வீட்டிற்குள்ளேயே இருக்கிறார்கள். தங்களுடைய சமூக வலைதளம் மூலம் நேரலைப் பேட்டியாகக் கொடுத்து வருகிறார்கள். இதில் கமல் - விஜய் சேதுபதி இருவரும் பங்கேற்ற நேரலை கலந்துரையாடல் நிகழ்ச்சி மே 2-ம் தேதி நடைபெற்றது.
இந்த நேரலைப் பேட்டியில், தனது பழைய படங்கள் நினைவுகள், அரசியல் வருகை, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்தார் கமல்ஹாசன். அதில் 1963-ம் ஆண்டிலிருந்து 1970-ம் ஆண்டு வரை ஏன் சினிமாவில் நடிக்கவில்லை என்பதற்கான காரணத்தைத் தெரிவித்துள்ளார் கமல்.
அந்தப் பகுதி:
கேள்வி: 1963-லிருந்து 1970 வரை நீங்கள் சினிமாவில் நடிக்கவில்லை. அந்த 7 வருடங்கள் என்ன செய்தீர்கள். சினிமாவுக்கான தயாரிப்பில் இருந்தீர்களா?
கமல்: சிறுவயதில் பட்டன் போல சிறியதாக இருந்ததால் என் அப்பா என்னை பட்டான் என்றுதான் அழைப்பார். நான் ஓரளவுக்கு வாய்ப்புகள் வந்து நடிக்க ஆரம்பித்த சமயத்தில் அவர் என்னிடம் என்னிடம் சொன்னார், "பட்டான், டேய் நீ உன்னோட சுயசரிதைய எழுதணும்" என்றார். அதற்கு நான் "நீங்க தானே பொய் சொல்றத குறைச்சிக்கனும்னு சொன்னீங்க, இப்போ பொய் சொல்லச் சொன்னா எப்படி" என்று கேட்டேன்.
"இல்லடா எழுதலாம். தப்பில்ல" என்றார்.
"இன்னும் எந்த சான்ஸுமே ஒழுங்கா வரலை, அதுக்குள்ள சுயசரிதையா" என்றேன்.
"இல்ல, இப்போலேர்ந்து ஆரம்பி, டெய்லி உன் கதைய ஃப்ரெண்ட்ஸ் கிட்ட சொல்லிட்டே இருக்கணும். ஒவ்வொரு நாளும் நடந்தத எல்லாம் மாத்தி மாத்தி சொல்லி நீயே இம்ப்ரூவ் ஆகிடுவ, உன் லைஃபுக்கான காரணத்தையே உருவாக்கிடுவ, அதுதான் சுயசரிதையே" என்று நகைச்சுவையாகச் சொன்னார்.
அந்த ஏழு வருஷம் என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தேன். இருளில் மூழ்கியிருந்த நாட்கள் என்று சொன்னால் மிகையாகாது. அந்தக் கட்டத்தில் எனக்குப் பெருந்துணையாக இருந்தவர் என் அம்மா ராஜலட்சுமிதான். அந்தப் பெண்மணி மட்டும் இல்லையென்றால் எந்தத் திசையில் வழியில்லாமல் சுற்றிக்கொண்டிருப்பேன் என்று எனக்குத் தெரியாது.
மற்ற பிள்ளைகளெல்லாம் படித்து முன்னேறிவிட்ட வேளையில், நான் இப்படி இருக்கிறேனே என்று கவலையில் இருந்தார். என்னால் அவருக்கு வியாதி கூடியிருக்கும். இதய நோயெல்லாம் அதிகமாகியிருக்கலாம். ஆனால் நான் என்ன கேட்டாலும் 'உனக்கு எது சரி என்று தோன்றுகிறதோ செய்' என்றுதான் சொல்வார்.
பள்ளிப்படிப்பைத் தொடர மாட்டேன் என்கிற சந்தேகம் அவருக்கு வந்துவிட்டது. திடீரென ஒரு நாள் நடனம் கற்றுக்கொள்ள வேண்டும் என்றேன். 'நன்றாக யோசித்துச் சொல். என்னைச் சமாளிக்க எதையும் சொல்லி வைக்காதே. நாளை காலையும் இதையே சொல்கிறாயா என்று பார்க்கலாம்' என்றார். அதற்கு முன்னால்தான் சென்னை மியூஸியம் தியேட்டரில் ஒரு நடன அரங்கேற்றம் பார்த்துவிட்டு வந்தோம். அது எனக்குள் ஏதோ தாக்கத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும்.
அடுத்த நாள் காலை எழுந்தும் அதையே சொன்னேன். உடனே அதற்கடுத்த நாள் அவர்களால் எந்த நடன ஆசிரியருக்கு சம்பளம் கொடுத்து கட்டுப்படியாகுமோ அவரை வீட்டுக்கு அழைத்து வந்து எனக்கு நடனம் சொல்லித் தரச் சொன்னார். எல்டாம்ஸ் சாலையில் என் வீட்டில்தான் என் நடனம் ஆரம்பித்தது. திடீர் ஆசை, நீடிக்காது என்று நினைத்தார். நான் அவ்வளவு வெறியாக அதில் ஈடுபடுவேன் என்று அம்மா எதிர்பார்த்திருக்கவில்லை.
அப்படியே காலம் போனது. ஒரு கட்டத்தில் என் நடனத்துக்கு என் படிப்பு இடைஞ்சலாக இருக்கிறது. அதை நிறுத்தி விடட்டுமா என்கிற ரீதியில் அண்ணனிடம் கேட்கும் நிலை வந்தது. அதற்கும் அண்ணா, அம்மா, அப்பா என எல்லோரும் உட்கார்ந்து பேசினார்கள். 'படிப்பு வரவில்லை என்று அவனே சொல்லிவிட்ட பிறகு நாம் வற்புறுத்துவது தவறு. குதிரையைத் தண்ணீரிடமும், தண்ணீரைக் குதிரையிடமும் கொண்டு செல்லலாம். ஆனால் குடிக்க வைப்பது யார்' என்று பேசி என் படிப்பை நிறுத்தும் முடிவுக்கு ஆதரவு தந்தனர்.
என் அம்மாவுக்குப் பதற்றமானது. இந்தப் பிள்ளையின் வாழ்க்கை எப்படி வேண்டுமானாலும் போகும் போல என்று நினைத்தார். எனவே வீட்டு வாசலில் கடைகளுக்கான இடத்தைக் கட்ட ஆரம்பித்தார். என்னைத்தான் இடத்தையும் அளக்கச் சொன்னார். இருக்கும் இடத்தில் எத்தனை கடைகள் கட்டலாம் என்று அவரே கணக்குப் போட்டார்.
''எதற்கு இது'' என்று கேட்டேன், ''நீ விளங்காமல் போய்விட்டால் இந்த வாடகையை வைத்தாவது பிழைத்துக் கொள்ளலாம்'' என்றார். நான் நடிகனாக வெற்றி பெற்ற பின்னும் சில காலம் அந்தக் கடைகள் அங்கு இருந்தன. அந்தக் கடைகளை என் அலுவலகமாக மாற்ற வேண்டும் என்பதுதான் தற்காலிகக் குறிக்கோளாக இருந்தது. இன்று அந்த இடம் என் மக்களின் அலுவலகமாகவும் மாறிவிட்டது.