புதுச்சேரி
ஊரடங்கு உத்தரவால் புதுச்சேரியில் அடுக்குமாடிக் குடியிருப்புகள் நிறைந்த நகரில் சுவற்றில் ப்ரொஜெக்டரில் தினமும் திரைப்படம் திரையிடப்படுகிறது. இது கடுமையான குற்றம் என்று குறிப்பிட்டு இதைத் தடுக்க முதல்வரிடம் தியேட்டர் சங்கத்தினர் புகார் தெரிவித்துள்ளனர்.
புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதியிலுள்ள ரெயின்போ நகர் பகுதியில் உள்ளது சுதந்திர பொன்விழா நகர் குடியிருப்பு. புதுச்சேரி வீட்டு வசதி வாரியம் கட்டிய இக்குடியிருப்பில் பல்வேறு பிரிவுகளில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்புகளில் 300 குடும்பத்தினர் மேல் வசிக்கின்றனர். இக்குடியிருப்பு மூன்று பிரிவுகளாக முழுவதும் தனிக்காம்பவுண்டில் அமைந்துள்ளது.
தற்போது ஊரடங்கு தடை உத்தரவால் வீட்டில் முடங்கிக் கிடக்கும் சூழலில் குடியிருப்புவாசிகள் ஒத்துழைப்போடு புரொஜக்டர் மூலம் பொதுமக்கள் படம் பார்க்க ஏற்பாடு செய்து உள்ளார் அந்த குடியிருப்புவாசி கங்கா சேகரன்.
இதுதொடர்பாக குடியிருப்பு வாசிகள் தரப்பில் விசாரித்தபோது, "கங்கா சேகரன் டிவி, புரொஜக்டர், கேமரா என தொழில்நுட்பப் பொருட்களை விற்பனை செய்து வருகிறார். அந்த குடியிருப்பு வாசிகளுக்குப் பொழுதுபோக்க முயற்சியாக அவர் தனது மாடியிலிருந்து எதிர் மாடி சுவற்றில் புரொஜக்டர் மூலமாக டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் படங்களை திரையிடுகிறார்.
இது அகண்ட திரையில் தியேட்டரில் பார்ப்பது போல் உள்ளது. இதில் அருகில் உள்ள குடியிருப்பு வாசிகள் மற்றும் நடைபயிற்சி செல்லும் அப்பகுதி பொதுமக்கள் பார்த்து ரசித்து வருகின்றனர். இதில் அந்த குடியிருப்பு மக்களுக்கு பிடித்த மற்றும் கேட்கக்கூடிய படங்களை வெளியிட்டு வருகிறார். கடந்த 15 நாட்களாக படங்கள், பாடல்கள் மாலை முதல் இரவு வரை திரையிடப்படுகிறது" என்று தெரிவித்தனர்.
இச்சூழலில் இதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர் சங்க இணை செயலர் ஸ்ரீதர் முதல்வர் நாராயணசாமியிடம் புகார் தெரிவித்துள்ளார். அதில், அனுமதி பெறாமல் பொது இடங்களில் திரைப்படங்களை அகண்ட திரையில் திரையிடுவது விடியோ பைரசி சட்டப்படி குற்றம். அகண்ட திரையில் சிடியில் திரைப்படம் திரையிடுவது கடுமையான குற்றம். இக்குற்றச்சம்பவம் மீது உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தடுக்கப்பட வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.