ஒவ்வொருவரின் வாழ்க்கையும் ஒரு பெருங்கதை. அந்த வாழ்க்கையின் களமும், அதில் அரங்கேறும் நிகழ்வுகளையும் விட உயிரோட்டமான திரைக்கதை உலகில் கிடையாது. வாழ்க்கையை எட்டியிருந்து வேடிக்கை பார்க்கும் ஒருவரால் ஓர் ஆகச்சிறந்த திரைக் காவியத்தை உருவாக்க முடியும் என்பதை அறிமுக இயக்குநர் ஆனந்த் ரவிச்சந்திரன் நிரூபித்துள்ளார்.
மரணத்தைக் கொண்டாடுவதே இறந்தவரின் வாழ்வுக்கு நாம் செலுத்தும் மிகப்பெரிய அஞ்சலி என்பதை இந்தப் படத்தில் அழுத்தம் திருத்தமாக இயக்குநர் பதிவுசெய்து உள்ளார். இழவு வீட்டில் நிலவும் சோகத்தைக் கூட ஒரு மெல்லிய நகைச்சுவையுடன் அவர் காட்சிப்படுத்தி இருக்கும் விதம் ஒரு தேர்ந்த இயக்குநரையும் மலைக்க வைக்கும்.
தனித்துவமான பாத்திரங்கள்
திரைத்துறையில் ஒப்பனைக் கலைஞராக இருக்கும் மீரா, சாவு வீட்டில் ஒப்பாரி பாடும் மீராவின் பாட்டி கிருஷ்ணவேணி, அவருக்கு ஒத்தாசையாக இருக்கும் அமுதா, இறந்தவருக்கு ஒப்பனை போடும் குபேரன், அவரின் கூட்டாளிகளாக இருக்கும் சங்கு தேவன், பாகுபலி எனப் படத்தின் கதைமாந்தர்கள் ஒவ்வொருவரும் தனித்துவமானவர்கள், வித்தியாசமானவர்கள், நாம் இதுவரை திரையில் பார்த்திராதவர்கள்.
பொன்னான அனுபவங்கள்
உயிலை மாற்றி எழுத வேண்டும் என்பதற்காக, சென்னையிலிருக்கும் மீராவைக் கிராமத்துக்கு வரும்படி கிருஷ்ணவேணி வற்புறுத்தி அழைக்கிறார். ஐந்து வயதிலேயே தனக்குப் பால்ய திருமணம் செய்துவைக்க முயன்றார் என்பதற்காக, பாட்டியுடன் ஒட்டும் உறவுமின்றி வசிக்கும் மீரா, அரைமனத்துடன் கிராமத்துக்கு வருகிறார், வந்த இடத்தில், பாட்டியின் சூழ்ச்சியால், மீராவுக்கு அங்கே கூடுதலாகச் சிலநாட்கள் தங்க வேண்டி வருகிறது. அந்தச் சில நாட்கள், வாழ்வில் தொலைந்த போன பொக்கிஷங்களை அவளுக்கு மீட்டெடுத்துத் தருகின்றன. தன்னுடைய தாயின் கூற்றுக்கு மாறாக உண்மையும், பாட்டியின் இயல்பும் இருப்பதை மீரா தெரிந்துகொள்கிறார். வாழ்வின் மற்றொரு பரிமாணத்தை அவளுக்கு அது காட்டுகிறது. பால்யத்தில் மீராவைத் திருமணம் செய்வதாக இருந்த குபேரன் கூட அவளுடன் நட்புடன் பழகத் தொடங்குகிறான். பெற்றோரை இழந்து சென்னையில் தனியாக வாழும் மீராவின் வாழ்க்கையில், வேருடனான தொடர்பால், மீண்டும் வசந்தம் வீசத் தொடங்குகிறது. கனத்த மனத்துடன் சென்னைக்கு வந்து தன்னுடைய பணியில் மூழ்குகிறார். கிராமத்திலிருக்கும் பாட்டி இறந்த செய்தி கேட்டு மீண்டும் கிராமத்துக்கு வருகிறார். பாட்டி உயிருடன் இல்லையென்றாலும், அந்த கிராமமே அவளுடன் இருந்தது. பாட்டியுடன் இருந்த அந்த மூன்று நாட்களில் மீரா பெற்ற அனுபவமே, ஆயிரம் பொன்.
ஒப்பாரி பாடல்
சென்னையிலிருந்து கிராமத்துக்கு வரும் மீராவின் பேருந்துப் பயணத்தில் படம் தொடங்குகிறது. கிராமத்திலிருக்கும் தேநீர்க் கடையிலிருக்கும் மனிதர்களிடம் பாட்டி வீட்டுக்குச் செல்லும் வழியை, சிகரெட்டைப் புகைத்தபடியே, சிடுசிடுவெனக் கேட்கிறார். அந்தத் தொனி, அவளுடைய தனிமைக்கான கேடயம் என்பது நமக்குச் சொல்லாமல் சொல்லப்படுகிறது. ஓர் இழவு வீட்டில் ஒப்பாரி பாடிக்கொண்டு இருக்கும் நிலையில் பாட்டியைச் சந்திக்கிறாள். அந்தச் சந்திப்பின் இடையே, இழவு வீட்டின் சடங்குகளும், வெள்ளந்தி மனிதர்களின் கோபதாபங்களும், சொந்தங்களின் செல்லச் சண்டைகளும், சகோதரர்களின் உரசல்களும், இறந்தவருக்கு ஒப்பனை போடும் சடங்கும், ஒப்பனை போடும் குபேரனின் முன்கோபமும், ஒப்பாரி பாடும் பாட்டியின் துடுக்கும், நம்முள் வெகு இயல்பாக, எந்த உறுத்தலுமின்றி ஐந்தே நிமிடங்களில் கடத்தப்படுகிறது. நம்மை நிமிர்ந்து உட்காரவும் வைக்கிறது.
மீராவின் புரிதல்
மீராவின் துயரமும், குபேரனுடன் நடக்கவிருந்த பால்ய திருமணத்திலிருந்து தப்பித்த அவளுடைய கதையும், அவளுடைய தாயின் மரணமும், பாட்டிக்கும் அவளுக்குமான புரிதலற்ற உறவும், குபேரனுக்கும் அவளுக்குமான உறவும், குபேரனின் தந்தைக்கு மீராவின் தாயால் நேர்ந்த அவமானமும், மீரா அந்தக் கிராமத்தில் தங்கியிருக்கும் மூன்று நாட்களில் நடக்கும் நிகழ்வுகளினூடே நமக்குச் சொல்லப்படுகின்றன.
அனைவரிடமும் (மீரா உட்பட) மல்லுக்கட்டி நிற்கும் பாட்டி, தன்னுடைய தொழிலைப் பெரிது என மதித்து எப்போதும் ஒரு திமிருடன் திரியும் குபேரன், யாரையும் எடுத்தெறிந்து பேசும் மீரா ஆகியோர் அந்த மூன்று நாட்களில் நடக்கும் இயல்பான நிகழ்வுகளின் வழியே ஒருவரையொருவர் புரிந்து, அன்பையும் உணர்வையும் மென்மையாகப் பரிமாறத் தொடங்கும் அந்தக் கணத்திலேயே படம் முடிந்துவிடுகிறது. ஆனால், வாழ்க்கை அப்படியில்லையே. என்னதான் இனிமையாக இருந்தாலும், அதை நாம் கடந்து சென்றுதானே தீர வேண்டும். படமும் இந்தப் புரிதலைக் கடந்து செல்கிறது.
மீராவின் ஒப்பாரி
சென்னையில் மீராவின் வேலைச்சூழலின் வழியே, சில நிமிடங்களில், அவளுடைய சிடுசிடு இயல்பின் காரணம் நமக்கு உணர்த்தப்படுகிறது. நாம் உணரும் அந்தத் தருணத்தில் அவளுக்கு போன் வருகிறது. மிகுந்த மகிழ்ச்சியுடனும் ஆவலுடனும் போனை அவள் எடுக்கிறாள். பாட்டி இறந்த செய்தி அது. கிராமத்துக்கு வருகிறாள். குபேரனால் ஒப்பனையூட்டப்பட்ட பாட்டி, வீட்டுக்கு முன் உள்ள நாற்காலியில் அமரவைக்கப்பட்டு இருக்கிறார். கிராமமே நிசப்தத்தில் மூழ்கியிருக்கிறது. அந்த அமைதியைக் கிழித்தபடி பெருங்குரலெடுத்து மீரா ஒப்பாரி பாடத் தொடங்குவதுடன் படம் முடிகிறது.
நேர்த்தியான தொழில்நுட்பம்
கதாபாத்திரங்கள் அனைவரையும், திரையின் ஒப்பனை துளியுமின்றி, நல்லது கெட்டது என்ற வரையறைக்குள் சுருக்காமல், வெகு இயல்பாக, இரத்தமும் சதையுமாக உலவவிட்டிருப்பதில் இருக்கும் நேர்த்தியே இந்தப் படத்தின் பிரதான வெற்றி. இயக்குநரின் ஆளுமைக்கும் அதுவே சான்று. துளியும் உறுத்தாத / துருத்தாத மணிகண்டனின் ஒளிப்பதிவு, படத்துடன் பின்னிப் பிணைந்து ஒரு கதாபாத்திரமாகவே பயணிக்கும் சம்நாத் நாக்கின் இசை, பிரகாஷின் நேர்த்தியான எடிட்டிங் போன்றவை படத்தை வேறு தளத்துக்கு இட்டுச் செல்கின்றன.
வேறு என்ன வேண்டும்?
கதைமாந்தர்கள், திரைமொழியின் வரையறைக்குள் சுருங்காமல், வாழ்க்கையை அவர்கள் போக்கில் வாழ்கிறார்கள். அவர்கள் போக்கில் பேசுகிறார்கள். அவர்கள் போக்கில் உலவுகிறார்கள். படம் பார்க்கும் நாமும் அவர்களிடையே உலவுகிறோம், சிரிக்கிறோம், அழுகிறோம், வாழ்கிறோம். இவற்றைவிட உயர்வான எதை ஒரு திரைப்படம் நமக்கு அளித்துவிட முடியும்.
தொடர்புக்கு: mohamed.hushain@hindutamil.co.in