'உல்லாசம்' படத்தின் போது அமிதாப் பச்சனின் நட்பு, பிரியம், எளிமை குறித்து இயக்குநர்கள் ஜேடி - ஜெர்ரி பகிர்ந்துள்ளனர்.
விளம்பரப் படவுலகில் முக்கியமான இயக்குநர்கள் ஜேடி-ஜெர்ரி. தற்போது கரோனா அச்சுறுத்தலால் தங்களுடைய நினைவலைகளை சமூக வலைதளத்தில் பகிர்ந்து வருகிறார்கள். இவர்களுடைய இயக்கத்தில் உருவான 'உல்லாசம்' படத்தை தயாரித்தவர் அமிதாப் பச்சன். அந்தப் படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் தயாரிப்பாளராக அறிமுகமானார்.
அந்தப் படத்தின் மூலம் தங்களுக்கும் அமிதாப் பச்சனும் இடையேயான நட்பு குறித்து தற்போது பகிர்ந்துள்ளார்கள் இயக்குநர்கள் ஜேடி-ஜெர்ரி. அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:
"அமிதாப் பச்சன் என்னும் ஆளுமை. ரொம்ப சின்ன வயதில் இருந்தே அமிதாப் பச்சன் படங்கள் என்றால் அப்படி ஒரு ஆசை. ஒரு படத்தையும் விட்டதில்லை. திருச்சி சிப்பித் தியேட்டரில் Sholay வை எத்தனை முறை பார்த்தோம் என்பதே நினைவில்லை. அவர் திரையில் நிகழ்த்திக் காட்டிய மாயாஜாலங்கள் ,அந்த பெரிய ஹீரோ, அவரின் வசீகர குரல். இந்தியாவையே தன் கைக்குள் இத்தனை வருடங்களாக வைத்திருக்க முடிகிறதென்றால் எத்துனை பெரிய ஆளுமை.
அவருக்கு படம் செய்கிறோம் என்பது, வாழ்வின் வசந்தகாலம் தானே. ABCL என்ற அந்த மாபெரும் நிறுவனத்தின் கதவுகள் இந்த எளிய மனிதர்களை அன்போடு வரவேற்றது. அமித்ஜியை முதன் முதலாய் படத்தின் துவக்க விழாவில் பார்க்கிறோம். அப்படி ஒரு பரவசம். ஆனால் அவரோ அத்தனை எளிமையாக அன்பாக அக்கறையோடு விசாரிக்கிறார். எங்களைப் பற்றி எல்லாம் தெரிந்து வைத்திருக்கிறார்.
அவரோ உலகமே வியந்து பார்க்கும் ஆளுமை ,நாங்களோ முதல் பட இயக்குநர்கள். அந்த பதட்டத்தை சுலபமாக நீக்கி எங்களை செளகரியமாக ஆக உணரச் செய்தார். யூனிட்டில் ஒவ்வொருவரையும் விசாரிக்கிறார். அதுவும் அஜித் மீது மிக்க அன்பு. ரகுவரன் சாரிடம் ஒரு நட்புணர்வு.
என்ன ஒரு நாள். பிறகு இசை வெளியீட்டு விழாவுக்கு வருகிறார். அதே பிரியம். எளிமை, விசாரிப்புகள். எல்லோரும் அவரோடு புகைப்படம் எடுத்துக் கொள்கிறோம். நினைவு பொக்கிஷமாக. ABCL, பெங்களூரில் உலக அழகிப் போட்டி நடத்தினார்கள். ஜம்மு சுகந்த் (பின்னாளில் 'பம்பாய்' படத்தின் தயாரிப்பாளர்) ஷகூன் வாஃ, ஹரிஷ் சாவ்லா என்ற ஒரு திறமையான படையே அவருக்குப் பின் வேலைப் பார்த்தது.
எங்களுக்கும் சிறப்பு அழைப்பு கிடைத்தது. என்ன ஒரு பிரம்மாண்ட நிகழ்வு. இதுவரை டிவியிலேயே பார்த்துக் கொண்டிருந்ததை நேரில் பார்க்கும் வாய்ப்பு. அதன் பிறகான பார்ட்டிகள்...! அமித்ஜி எங்களுக்கு சுவாட்சார்லாந்து போய் பாடல்கள் எடுக்கும் வாய்ப்பைத் தந்தார்.
எங்களுக்கு ஒதுக்கப்பட்ட பட்ஜெட்டில் வெளிநாட்டு படப்பிடிப்பே இல்லை. ஆனால் அமித்ஜி அங்கு படப்பிடிப்பு பண்ணிக்கொண்டு இருந்ததில் அதே யூனிட், கேமிராவை கொண்டு எங்களுக்கும் படமெடுக்க வாய்ப்பு கொடுத்தார். எனவே நாங்கள், அஜித் ,விக்ரம், மகேஸ்வரி, ஜீவா, ராஜு சுந்தரம் மற்றும் ஒரு சிறிய படக்குழு மட்டும் போய் அந்த படக்குழுவினரோடு இணைந்து படமெடுத்தோம்.
முதல் வெளிநாட்டுப் பயணம். அந்த உற்சாகம் மிகக் குறுகிய நாட்களில் மூன்று பாடல்கள் எடுத்தோம். சோலாரே (பார்த்தி பாஸ்கர் எழுதியது), யாரோ யாரோடு யாரோ(அறிவுமதி), வீசும் காற்றுக்கு பூவை தெரியாதா(பழனி பாரதி) வில் சில பகுதிகள்.
இவ்வாறு இயக்குநர்கள் ஜேடி-ஜெர்ரி தெரிவித்துள்ளனர்.