பிரதமரைப் புகழ்ந்து கடிதம் எழுதியிருந்தால் இன்னும் பெரிய புகழ் வந்திருக்குமே என்று தான் பிரதமருக்குக் கடிதம் எழுதியது குறித்து கமல் தெரிவித்துள்ளார்
கரோனா அச்சுறுத்தலால் பிரபலங்கள் அனைவருமே வீட்டிற்குள்ளேயே இருக்கிறார்கள். தங்களுடைய சமூக வலைதளம் மூலம் நேரலைப் பேட்டியாகக் கொடுத்து வருகிறார்கள். இதில் கமல் - விஜய் சேதுபதி இருவரும் பங்கேற்ற நேரலை கலந்துரையாடல் நிகழ்ச்சி இன்று (மே 2) நண்பகல் 12 மணியளவில் தொடங்கி 1:30 மணி வரை நடைபெற்றது.
இதில் விஜய் சேதுபதி மற்றும் அபிஷேக் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு கமல் பதிலளித்தார். அதில் ஒரு பகுதி:
விஜய் சேதுபதி: கரோனா ஊரடங்கான இந்தச் சமயத்தில் கொடுமையே பசி தான் என்று நான் நம்புகிறேன். மீண்டும் வேலைகள் தொடங்கியவுடனே எவ்வளவு பேர் எவ்வளவு பிரச்சினையில் மாட்டுவார்கள் எனத் தெரியாது. இந்த ஊரடங்கு நீட்டித்துக் கொண்டே இருக்கிறதே... (கேள்வியை முடிக்கும் முன்)
கமல்: நான் கேட்பது ஒன்றே ஒன்று தான். பிரதமர் மீது கோபம் எல்லாம் இல்லை. இந்த பிரதமர் வாழ்க்கை என்பது 5 வருடங்கள் வாழ்க்கைதானே. அப்புறம் யார் வேண்டுமானாலும் வரலாம். ஆனால், இந்த ஏழையைப் பாதுகாக்க வேண்டியது குடியுரிமைச் சட்டத்திலே இருக்கக் கூடிய முக்கியமான ஒரு அம்சம். நேற்று வரையும் அன்றாடம் காட்சி அவன். அவனுக்கு வாழும் முறையும் வாழ்க்கையும் வெவ்வேறு அல்ல.
இன்றைக்கு நான் யாருக்கும் அடிமையில்லை என்று சொல்லிக் கொண்டு போவதற்கு ஒரே காரணம், தினமும் அவனும் அவன் குடும்பமும் சாப்பிடச் சம்பளம் வந்தது. அவனை நாலே நாளில் தெருவில் தூக்கிப் போட்டுவிட்டோம். நீங்களும் நானும். அப்புறமாக நாம் பிரதமர், முதலமைச்சரைப் பேசலாம். நாம் எப்படி அதற்கு ஒப்புக் கொண்டோம் அதற்கு. பெரிய குரல் எழுப்பவில்லையே என்ற பதற்றத்தில் தான் அந்தக் கடிதத்தை எழுதினேன். புகழுக்காக எழுதினார் என்கிறார்கள். அவரைப் புகழ்ந்து எழுதிவிட்டால் இன்னும் பெரிய புகழ் வருமே. நீங்கள் கேட்கும் கேள்வியை அனைவரும் கேட்க வேண்டும். இன்னும் கொடுமையாக வளராமல் இருக்க வேண்டும்.
இவ்வாறு கமல் பதிலளித்தார்.