'ஹே ராம்' படத்தின் தணிக்கையில் நடந்த விஷயங்கள் அனைத்தையுமே கமல் தெரிவித்துள்ளார்.
கமல் இயக்கி, தயாரித்து, நடித்து 2000-ம் ஆண்டு வெளியான படம் 'ஹே ராம்'. இதில் ஷாரூக் கான், நஸ்ரூதின் ஷா, ஹேமமாலினி, ராணி முகர்ஜி, வசுந்தரா தாஸ் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இந்தப் படம் வெளியானபோது எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. தற்போது இந்தப் படத்தைக் கொண்டாடி வருகிறார்கள்.
மேலும், கடும் சர்ச்சைக்குப் பிறகே இந்தப் படம் வெளியானது. 'ஹே ராம்' வெளியான சமயத்தில் தணிக்கையில் பெரும் சர்ச்சை உருவானதாகவும், தன் படத்துக்கான ஆதாரத்தை வண்டியில் கமல் எடுத்துக்கொண்டு போனதாகவும் செய்தி வெளியானது.
கரோனா ஊரடங்கில் பிரபலங்கள் பலரும் வீட்டில் இருந்துகொண்டே தங்களுடைய சமூக வலைதளம் மூலம் நேரலை பேட்டியாக கொடுத்து வருகிறார்கள். இந்நிலையில் கமல் - விஜய் சேதுபதி இருவரும் பங்கேற்ற நேரலை கலந்துரையாடல் நிகழ்ச்சி இன்று (மே 2) நண்பகல் 12 மணியளவில் தொடங்கி 1:30 மணி வரை நடைபெற்றது.
இதில் கமலிடம் விஜய் சேதுபதி, " 'ஹே ராம்' படத்தின் தணிக்கைக்காக வண்டி நிறைய ஃபைல்கள் எடுத்துக்கொண்டு போனதாக ஒரு பேச்சு இருக்கிறது. அது உண்மையா?" என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு கமல் கூறியதாவது:
"நிறைய ஆதாரங்களை எடுத்துக்கொண்டு போனேன். வண்டி நிறைய என்று சொல்வது சும்மா பேச்சுக்காகச் சொல்வது. தணிக்கையில் நிறைய அவமானங்கள். தணிக்கைத் துறையிலும் நிறைய நல்லவர்கள் இருக்கிறார்கள். நமக்காக கண் கலங்குபவர்களும் இருக்கிறார்கள். ஆனால், என்ன பண்ணுவது அது அரசாங்க வேலை.
'ஹே ராம்' படத்தை தணிக்கை அதிகாரிகள் பார்த்ததை விட, ஒரு எம்.பி., மறைந்த சுஷ்மா ஸ்வராஜ், சத்ருகன் சின்ஹா என பாஜகவினர் அனைவரும் அந்தப் படத்தை வெளியே விட வேண்டுமா இல்லையா என்பதை முடிவு செய்து ஓ.கே. பண்ணியவுடன்தான் அந்தப் படமே வெளியானது. இது சரித்திரம். நான் சொல்வது மிகையல்ல. இது குறித்து வேறு எதுவும் பேச விரும்பவில்லை. அந்த அளவுக்கு அதை உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருந்தார்கள்.
அதில் எனக்குப் பெரிய அவமானம் என்னவென்றால், காங்கிரஸ்காரர்கள் சிலர் அந்தப் படத்தை காந்திக்கு எதிரான படம் என்றார்கள். அதனால் அந்தப் படத்துக்குத் தடை விதிக்க வேண்டும் என்று அவர்களும் குரல் கொடுத்தார்கள். அதில் வருத்தப்பட்டது காந்தியின் கொள்ளுப் பேரன் துஷார் காந்தியும் நானும் தான். இருவரும் கண்ணீர் வடிக்காத குறை தான்.
நான் காந்திக்கு செய்த மிகப்பெரிய மரியாதையாக அதை நினைக்கிறேன். எனக்கு காந்தி பற்றி யாரும் சொல்லித் தரவில்லை. நானே தேடிப் பிடித்துப் படித்துத் தெரிந்து கொண்ட என் கொள்ளுத் தாத்தாதான் காந்தி".
இவ்வாறு கமல் பதிலளித்தார்.