தமிழ் சினிமா

'அய்யப்பனும் கோஷியும்' ரசித்தேன்: விஷ்ணு விஷால் | 'ராட்சசன்' பிடித்திருந்தது: பிரித்விராஜ்

செய்திப்பிரிவு

'அய்யப்பனும் கோஷியும்' படத்தை ரசித்தேன் என்று விஷ்ணு விஷாலும், 'ராட்சசன்' பிடித்திருந்தது என்று பிரித்விராஜும் தெரிவித்துள்ளனர்.

பிஜு மேனன், பிரித்விராஜ் இருவரும் பிரதான கதாபாத்திரத்தில் நடித்து வெளியான மலையாள படம் 'அய்யப்பனும் கோஷியும்'. பிப்ரவரி 7-ம் தேதி வெளியான இந்தப் படம், திரைக்கதை ஆசிரியர் சச்சியை இயக்குநராகவும் வெற்றி பெற வைத்தது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இந்தப் படத்துக்கு மலையாளத்தில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

இந்தப் படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை தயாரிப்பாளர் பைவ் ஸ்டார் கதிரேசன் கைப்பற்றியுள்ளார். இன்னும் யார் நடிக்கவுள்ளார்கள், யார் இயக்குநர் என்பதெல்லாம் முடிவாகவில்லை.

இதனிடையே, இந்தப் படத்தை நடிகர் விஷ்ணு விஷால் பார்த்துவிட்டு நடிகர் பிரித்விராஜுக்குப் பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பதிவில் விஷ்ணு விஷால் கூறியிருப்பதாவது:

"நேர்மைக்கும், நேரடியாக விஷயத்தைச் சொல்வதற்கும் மிகச்சிறந்த உதாரணம் 'அய்யப்பனும் கோஷியும்' திரைப்படம். உங்களையும் உங்கள் குழுவினரையும் ரசித்தேன். நீங்கள் இருக்கும் இடத்திலிருந்து திரும்பி வருவீர்கள் என்று உறுதியாகச் சொல்கிறேன். ஒரு ரசிகனாகவும், நலவிரும்பியாகவும்.. கடவுள் ஆசீர்வதிக்கட்டும்."

இவ்வாறு விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார்.

விஷ்ணு விஷாலின் ட்வீட்டுக்கு பிரித்விராஜ், "நன்றி விஷ்ணு.. 'ராட்சசன்' மிகவும் பிடித்திருந்தது. உங்களிடமிருந்து இன்னும் நிறைய நல்ல படங்களை எதிர்பார்க்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT