தமிழ் சினிமா

’தனி ஒருத்தி’ ஷோபா; 18 வயதில் 17 படங்கள்; இறந்து 40 வருடமாகியும் மறக்கமுடியாத நாயகி! 

வி. ராம்ஜி

- இன்று ஷோபா நினைவுநாள்

நூற்றாண்டு கண்ட சினிமா உலகில், நடிகைகளுக்கா பஞ்சம்? பக்கத்து மாநிலங்களிலிருந்தெல்லாம் வந்து நம் மனதில் இடம் பிடித்திருக்கிறார்கள். ஆனால் அந்த இடம் எப்படியான இடம் என்பதுதான் இங்கே முக்கியம். இந்தக் கால தலைமுறையினருக்கு, எண்பதுகளில் வந்த படங்கள் தெரியாமல் இருக்கலாம். ஆனால் எழுபதுகளின் இறுதியில் வந்து,எண்பது தொடங்கும்போதே நம்மைவிட்டுப் பிரிந்த அந்த நடிகையை இந்தத் தலைமுறையினரும் அறிந்திருக்கிறார்கள். தெரிந்து உணர்ந்து சிலிர்த்திருக்கிறார்கள். அவர்...?

பொதுவாகவே, குண்டான பூசின உடம்பு இல்லை. கவர்ச்சிக் காட்டியெல்லாம் நடிக்கவில்லை. வத்தல்தொத்தல் உடம்புதான். நடித்த படங்கள் கூட 25ஐத் தாண்டவில்லை. தலைமுறைகளும் கடந்துவிட்டன. ஆனாலும் அவரை மறக்கவில்லை ரசிகர்கள். மறக்கவே முடியாத நடிகை அவர். அதற்குக் காரணம்... அந்த முகம். நம் தெருவில் உள்ள பெண்ணைப் போன்றதொரு முகம். நம் வீட்டுப் பெண்ணைப் போன்ற, அந்த வெள்ளந்திச் சிரிப்பு. எந்தக் கல்மிஷமோ விகல்பமோ பொய்யோ இல்லாத கல்மிஷமில்லாத சிரிப்பு. நம் சகோதரியைப் போன்றதொரு சிரிப்பு. குழந்தைத்தனமான சிரிப்பு. அந்தக் குழந்தைமைதான் குழந்தைமையும் கொஞ்சம் மேதைமைத்தனமும்தான் நம்மை ஈர்த்துப் போட்டது. இன்னமும் அவரை... தமிழ் சினிமாவின் ரசிகர்கள் யாரோ எங்கேயோ இருந்துகொண்டு, அவர் பெயரைச் சொல்லிக்கொண்டிருப்பார்கள். அவரைச் சொல்லி சிலாகித்துக் கொண்டிருப்பார்கள். அவர் ... ஷோபா.


குழந்தைமையுடன் இருக்கிற ஷோபாவின் ஊர் கேரளம், கடவுளின் தேசம் அது. ஒருவகையில், ஷோபா கூட கடவுளின் குழந்தைதான்! குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். ‘குழந்தை மகாலக்ஷ்மி மாதிரி இருக்காளே’ என்றார்கள். ஷோபாவின் இயற்பெயர் மகாலக்ஷ்மிதான்.

தமிழிலும் குழந்தை நட்சத்திரமாகத்தான் அறிமுகமானார். பிறகு ஓர் இடைவெளிக்குப் பிறகு, இயக்குநர் கே.பாலசந்தரின் படத்தில் குமரியாக அறிமுகமானார். அந்தப் படம்... ‘நிழல் நிஜமாகிறது’. ஆனால், இவரின் வாழ்வில் எதுவும் நிஜமாகாமல் நிழலாகவே போய்விட்டதுதான் பெருஞ்சோகம்.

‘நிழல் நிஜமாகிறது’ படத்தில் சுமித்ராதான் நாயகி. கமல்தான் நாயகன். சரத்பாபுவும் நடித்திருப்பார். ஹனுமந்துவுக்கும் கனமான கேரக்டர். ஆனாலும் அவர்களையெல்லாம் தாண்டி, நம் மனதுக்குள் வந்து உட்கார்ந்துகொள்வார் ஷோபா. அந்த யதார்த்தமான நடிப்பும் கள்ளமில்லாச் சிரிப்பும் குறும்புப் பார்வையும் யாரைத்தான் ஈர்க்கவில்லை?

பாலுமகேந்திராவின் ‘அழியாதகோலங்கள்’ படத்தில் டீச்சர் வேடம். நடிப்பில் ஆகச்சிறந்த பரிணாமம் காட்டி பிரமாதப்படுத்தினார். காட்டன் புடவை கட்டிய குழந்தையாகத்தான் ரசிகர்கள் பாசம் காட்டி கொண்டாடினார்கள்.

’நிழல் நிஜமாகிறது’ படத்தில் தாவணி. ‘அழியாத கோலங்கள்’ படத்தில் புடவை. ‘மூடுபனி’ படத்தில் மாடர்ன் டிரஸ். ‘அந்த முட்டைக்கண்ணை வைத்துக்கொண்டு இந்த பிரதாப்பு, முழுங்கிடற மாதிரி பாக்கறாம்பா. நம்ம ஷோபாவை எதுனா செஞ்சிருவானோன்னு பயமா இருந்துச்சு’ என்று ரசிகர்கள் சொல்லும் அளவுக்கு, சொல்லிப் புலம்பும் அளவுக்கு நம் எல்லார் மனங்களிலும் சிம்மாசனமிட்டு அமர்ந்தார் ஷோபா.

மளமளவென படங்கள். கொஞ்சம் கூட இடைவெளியே இல்லாமல் நடித்தார் ஷோபா. ஏராளமான படங்கள்; பாத்திரங்கள். இயக்குநர் துரையின் ‘பசி’ படத்தில் நடித்த போது, அழுக்கு உடையும் குப்பைச் சாக்குமாக வலம் வந்த ஷோபாவை, இன்னும் கொண்டாடினார்கள். அரசாங்கமும் வியந்து பாராட்டியது. ‘ஊர்வசி’ என்கிற பட்டத்தை வழங்கி கெளரவித்தது. நடிகை சாரதாவுக்குப் பிறகு அந்தப் பட்டத்தை வாங்கிய நடிகை ஷோபாதான்!

’முள்ளும் மலரும்’ படத்தில் தங்கை அவதாரமே எடுத்திருப்பார். ‘பாசமலர்’ சாவித்திரிக்குப் பிறகு தமிழ் சினிமாவை மிகமிக ஈர்த்த தங்கை ‘வள்ளி’ ஷோபாவாகத்தான் இருக்கும்!


விஜயகாந்துடன் நடித்த அந்தப் பட ஓடியதோ இல்லையோ... அந்தப் படம் இன்றைக்கும் நினைவில் இருப்பதற்கு ‘ஏதோ நினைவுகள்’ பாடலும் இளையராஜாவின் இசையும் விஜயகாந்த் - ஷோபாவின் இயல்பான நடிப்புமே காரணம். யூடியூபில் இந்தப் பாடலை இன்றைக்கும் பார்த்துக் கொண்டே இருக்கிறார்கள். ‘அடிப்பெண்ணே... பொன்னூஞ்சலாடுது இளமை’பாடலும் அப்படித்தான்!

இளம் வயதுதான். எல்லாமே அவசரம் அவசரமாக வந்தது. மரணம் உட்பட! ஷோபா எனும் கனவுலகின் நிஜ தேவதைக்கு, இறக்கும் போது பதினெட்டு வயதுதான். 17 படங்கள் வரை நடித்துவிட்டார்.

1962ம் ஆண்டு பிறந்த ஷோபா, 78ம் ஆண்டு ‘நிழல் நிஜமாகிறது’ படத்தில் அறிமுகமான ஷோபா, 1980ம் ஆண்டு மே மாதம் 1ம் தேதி இறந்தார். பதினெட்டு வயது கூட நிறைவுறாத அந்தத் தேவதையின் தொடர்கதை, பாதியிலேயே தன்னை முடித்துக் கொண்டு முற்றும் போட்டது.

யாருடனும் ஷோபாவை ஒப்பிடமுடியாது. அதேபோல, ஷோபாக்கு நிகரான நடிகை என்று எவரையும் சொல்லவும் முடியாது. ஏனென்றால்... ஷோபா எனும் நடிப்பு தேவதை... தனி ஒருத்தி!

1980ம் ஆண்டு மே மாதம் 1ம் தேதி, அந்த நடிப்புக்கு தனி ஒருத்தியாகத் திகழ்ந்த ஷோபா, இறந்தார். ஷோபா மறைந்து, 40 ஆண்டுகளாகின்றன. ஆனாலும் நம் இதயத்தில், எந்தவொரு நடிகைக்கும் கொடுக்காத சிம்மாசனத்தில் கம்பீரமாக அமர்ந்து வாழ்ந்துகொண்டிருக்கிறார்.

ஷோபாவின் நினைவு நாள் இன்று.

SCROLL FOR NEXT