தனது வாழ்வில் மறக்க முடியாத தருணம் எது என்பதை பூர்ணிமா பாக்யராஜ் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
நீண்ட நாட்கள் கழித்து 'ஆதலால் காதல் செய்வீர்' படத்தின் மூலம் நடிக்கத் தொடங்கியவர் பாக்யராஜின் மனைவி பூர்ணிமா பாக்யராஜ். அதனைத் தொடர்ந்து சில தொலைக்காட்சித் தொடரிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
தற்போது தனது திரையுலகப் பயணம் தொடர்பாக 'தி இந்து' ஆங்கில நாளிதழுக்கு பேட்டியளித்துள்ளார் பூர்ணிமா பாக்யராஜ். அதில் "வாழ்க்கையில் மறக்க முடியாத தருணம் எது" என்ற கேள்விக்கு பூர்ணிமா பாக்யராஜ் கூறியிருப்பதாவது:
"என் வாழ்வில் மறக்க முடியாத தருணம் எனது திருமணம் தான். நானும், என் கணவரும் எம்ஜிஆர் அவர்களை அழைக்கச் சென்றிருந்தோம். முகூர்த்தத்துக்கு முன்னால் வந்துவிடுவதாகச் சொன்னார். சொன்னபடி வந்தார். அதே போல நடிகர் திலகம் சிவாஜி அவர்களும் வந்திருந்தார். இருவரும் தாலியை எடுத்துக் கொடுத்தார்கள். அந்த புகைப்படத்தை நாங்கள் பாதுகாத்து வைத்திருக்கிறோம்.
சாந்தனுவுக்கு திருமணமானபோது விஜய் வந்து தாலியெடுத்துத் தர வேண்டும் என்று விரும்பினோம். அவரும் ஒப்புக்கொண்டார். அதை விட, காலை தனது மனைவியால் வர முடியவில்லை என்பதால், அவரை அழைத்துக் கொண்டு மாலை வரவேற்பிலும் கலந்துகொண்டார். இதை விட வேறென்ன வேண்டும்"
இவ்வாறு பூர்ணிமா பாக்யராஜ் தெரிவித்துள்ளார்