திருமணம் அனைத்தையும் மாற்றிவிட்டது என்று பூர்ணிமா பாக்யராஜ் அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.
நீண்ட நாட்கள் கழித்து 'ஆதலால் காதல் செய்வீர்' படத்தின் மூலம் நடிக்கத் தொடங்கியவர் பாக்யராஜின் மனைவி பூர்ணிமா பாக்யராஜ். அதனைத் தொடர்ந்து சில தொலைக்காட்சித் தொடரிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
தற்போது தனது திரையுலகப் பயணம் தொடர்பாக 'தி இந்து' ஆங்கில நாளிதழுக்கு பேட்டியளித்துள்ளார் பூர்ணிமா பாக்யராஜ். அதில் "பிஸியான நடிகையாக வலம் வந்த காலம் குறித்து..." என்ற கேள்விக்கு பூர்ணிமா பாக்யராஜ் கூறியிருப்பதாவது:
"என் திருமணம் வரை நான் அடுத்தடுத்து நடித்துக் கொண்டிருந்தேன். 1980-ம் ஆண்டு மலையாளத்தில் நடித்த 'மஞ்சில் விரிஞ்ச பூக்கள்' தான் எனது முதல் படம். அதன் பின் 40 மலையாளப் படங்களில் நடித்திருக்கிறேன். தெலுங்கு, போஜ்புரி மொழிகளில் தலா ஒரு படமும், இந்தியில் 6 படங்களும் நடித்தேன். நான் நடித்த பெரும்பாலான திரைப்படங்கள் மலையாளம் மற்றும் தமிழ். மொத்தம் 70 படங்கள்.
திருமணம் அனைத்தையும் மாற்றிவிட்டது. எனது கவனம் முழுவதும் எனது ஆடை வடிவமைப்பு நிறுவனத்திலும், என் குடும்பத்தின் மீதுமே இருந்தது. சில வருடங்களுக்கு முன் 'ஆதலால் காதல் செய்வீர்' படம் மூலம் மீண்டும் நடிக்க ஆரம்பித்தேன். இப்போது திரைப்படம், சின்னத்திரை என இரண்டிலும் நடிக்கிறேன். சன் டிவியில் 'கண்மணி' தொடர் மூலம் சின்னத்திரையில் அறிமுகம். ஜீ தமிழிலில் 'சூர்ய வம்சம்' என்ற தொடரிலும் நடிக்கிறேன். இப்போது ஊரடங்கால் படப்பிடிப்பு தடைப்பட்டுள்ளது”.
இவ்வாறு பூர்ணிமா பாக்யராஜ் தெரிவித்துள்ளார்.
திரையுலகில் தற்போது உள்ள மாற்றம் தொடர்பான கேள்விக்கு பூர்ணிமா பாக்யராஜ், "சினிமா, தொலைக்காட்சி இரண்டிலுமே இயக்குநர்கள் நல்ல அறிவோடு இருக்கிறார்கள். துரிதமாக, கொடுக்கப்பட்ட நேரத்தை மனதில் வைத்து வேலை செய்கின்றனர். 1980களில் நான் நடிக்க ஆரம்பித்த போது எனக்கு ஒன்றும் தெரியாது. மெதுவாகத்தான் கற்றேன். இன்றைய கலைஞர்களுக்கு திரைக்கதை, கேமரா கோணம் என எல்லாம் தெரிந்திருக்கிறது. தொழில்நுட்பத்தின் உதவியால் தெரிந்து வைத்திருக்கிறார்கள். இணையம் எல்லாவற்றையும் கற்றுக்கொடுக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.