'மாஸ்டர்' படக்குழுவினர் தொடர்பான கார்ட்டூனால் ஏற்பட்ட சர்ச்சை முடிவுக்கு வந்திருப்பதால் மாளவிகா மோகனன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
விஜய் நடித்துள்ள 'மாஸ்டர்' படத்தில் நாயகியாக நடித்துள்ளார் மாளவிகா மோகனன். லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்தப் படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் முடிய இன்னும் 20 நாட்கள் தேவை என்று படக்குழு தெரிவித்துள்ளது. கரோனா அச்சுறுத்தல் முடிந்தவுடன், அந்தப் பணிகளை முடித்து திரைக்குக் கொண்டு வர படக்குழு முடிவு செய்துள்ளது.
இதனிடையே, 'மாஸ்டர்' படம் குறித்து ரசிகர் ஒரு கார்ட்டூனை ட்விட்டர் பதிவில் வெளியிட்டார். அதில் 'மாஸ்டர்' குழுவினர் ஊரடங்கில் என்ன செய்து கொண்டிருப்பார்கள் என்று குறிப்பிட்டு, ஒவ்வொரு நடிகரும் வீட்டிற்குள் என்ன செய்து கொண்டிருப்பார்கள் என்பதை வரைந்திருந்தார். அதில் மாளவிகா மோகனன் சமைப்பது போன்று வடிவமைத்திருந்தார்.
இந்த கார்ட்டூனுக்கு மாளவிகா மோகனன் தனது ட்விட்டர் பதிவில், "ஒரு கற்பனையான (சினிமா கதாபாத்திரங்கள் இருக்கும்) வீட்டில் கூட, பெண்ணின் வேலை என்பது சமையல் செய்வதுதானா? எப்போது இதுபோன்ற பாலினப் பாகுபாடு சாகும்?" என்று குறிப்பிட்டார். உடனே ரசிகர்கள் பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவே, ட்வீட்டை நீக்கிவிட்டார். ஆனால், அதை ஸ்கிரீன் ஷாட்டாக வைத்துக்கொண்டு பலரும் கேள்வி எழுப்பி வந்தனர்.
தனது கார்ட்டூனால் உருவான சர்ச்சை என்பதால், உடனடியாக மாளவிகா மோகனன் புத்தகம் படிப்பது போன்று கார்ட்டூனை மாற்றி வெளியிட்டார். அதற்குப் பதிலளிக்கும் விதமாக மாளவிகா மோகனன், "தனக்கு இந்த வெர்ஷன் கார்ட்டூன் பிடித்துள்ளது. உங்களுக்கு எப்படி எனக்குப் புத்தகம் படிப்பது பிடிக்கும் எனத் தெரியும்" என்று கேட்டார்.
மேலும், ஒருவர் அந்த கார்ட்டூனில் மாளவிகா மோகனன் மிருகங்களைப் புகைப்படம் எடுப்பது போல வடிவமைத்து வெளியிட்டார். அதற்கு மாளவிகா மோகனன், "பாலினத்துக்கான அடையாளங்கள் என்று சொல்லப்படும் விஷயங்களைத் தாண்டி, எனக்குப் பிடித்த விஷயங்களை வைத்து என்னை வரையறுப்பது நன்றாக இருக்கிறது. எனக்கு வனவிலங்குகள் என்றால் பிடிக்கும்" என்று தெரிவித்துள்ளார்.