'பொன்மகள் வந்தாள்' பாணியில் 'டக்கர்' படமும் டிஜிட்டலில் வெளியாகவுள்ளது.
கரோனா வைரஸ் பாதிப்பு தமிழ்த் திரையுலகினர் மத்தியில் ஒருவித அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது என்று சொல்லலாம். ஏனென்றால் பல படங்களின் படப்பிடிப்பு பாதியிலே நிற்கிறது, முடிந்த படங்கள் வெளியிட முடியாத சூழல், வட்டி ஒரு புறம் ஏறிக் கொண்டே இருக்கிறது. இப்படிப் பல விஷயங்களால் தயாரிப்பாளர்கள் மிகவும் குழப்பத்தில் இருக்கிறார்கள்.
இதனிடையே, OTT நிறுவனங்களோ இந்தச் சமயத்தில் மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருப்பதால் புதிய படங்களை வெளியிட்டால் சந்தாதாரர்கள் அதிகரிப்பார்கள் என்று திட்டமிட்டார்கள். இதனால் வெளியீட்டுக்குத் தயாராக இருக்கும் பல படங்களை வாங்கி வெளியிடவுள்ளனர்.
இதில் பிரட்ரிக் இயக்கத்தில் ஜோதிகா நடித்த 'பொன்மகள் வந்தாள்' படத்தை முதலில் வாங்கினார்கள். இதனால் தமிழ்த் திரையுலகில் தயாரிப்பாளர்கள் - திரையரங்கு உரிமையாளர்கள் இருவருக்கும் மோதல் வெடித்துள்ளது. இந்தப் பிரச்சினை இன்னும் முடிவுக்கு வரவில்லை.
தற்போது, சித்தார்த் நாயகனாக நடித்துள்ள 'டக்கர்' படத்தையும் அமேசான் ப்ரைம் டிஜிட்டல் நிறுவனம் நல்ல விலை கொடுத்து வாங்கியுள்ளது உறுதியாகியுள்ளது. 'கப்பல்' படத்தின் இயக்குநர் ஜி.கிரிஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
அதிரடி சண்டைக் காட்சிகள் நிரம்பிய காதல் படமாக 'டக்கர்' உருவாகியுள்ளது. இதில் 'மஜிலி' படத்தில் நடித்த திவ்யான்ஷா கெளசிக் நாயகியாக நடித்துள்ளார். அபிமன்யூ சிங், யோகி பாபு, முனீஷ்காந்த், ஆர்.ஜே.விக்னேஷ் ஆகியோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ள இந்தப் படத்துக்கு வாஞ்சிநாதன் முருகேசன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.