தமிழ் சினிமா

கரோனா அச்சுறுத்தல்: சிங்கப்பூர் மக்களுக்கு கமல் வேண்டுகோள்

செய்திப்பிரிவு

கரோனா அச்சுறுத்தல் தொடர்பாக சிங்கப்பூர் மக்களுக்கு கமல் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்தியாவில் கரோனா அச்சுறுத்தலால் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அனைவரும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று பல்வேறு திரையுலகப் பிரபலங்கள் வீடியோக்கள் வெளியிட்டு வருகிறார்கள்.

இதனிடையே, வெளிநாட்டில் வாழும் தமிழர்களுக்காகவும் வீடியோக்கள் வெளியிட்டுள்ளனர். இதில் சிங்கப்பூர் அரசின் வேண்டுகோளுக்கு இணங்க ரஜினி தனது ட்விட்டர் பதிவில் வீடியோ ஒன்றினை வெளியிட்டார். தற்போது கமலும் சிங்கப்பூரில் வாழும் மக்களுக்காக வீடியோ வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

"சிங்கப்பூரில் வாழும் சகோதர, சகோதரிகள், தொழிலாளர்கள் அனைவருக்கும் வணக்கம். கோவிட்-19 தொற்று உலகம் எங்கிலும் பரவியுள்ளது. அதை எதிர்கொள்ள அனைத்து அரசாங்கங்களும் முயற்சி செய்து கொண்டிருக்கின்றன. இந்தத் தொற்று மரணத்தை விளைவிக்கக் கூடியது. இதில் அரசாங்கத்துக்கு நிகராக நம்முடைய பாதுகாப்புக்கு நாமே பொறுப்பேற்க வேண்டும். நாம்தான் அதற்குப் பொறுப்பு.

அரசாங்கம் ஆவன செய்ய வேண்டிய அனைத்தையும் செய்து கொண்டிருக்கிறது. ஆகையால், சிங்கப்பூர் அரசாங்கம் உங்களுக்காகச் செய்திருக்கும் ஏற்பாடுகளைப் பாராட்டி, அதற்கேற்ப போதிய சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். இதை நீங்கள் கடைப்பிடித்தால் அரசாங்கத்தின் பணி ஏதுவாக இருக்கும். இது மிகவும் முக்கியம். நம்மை நாம் காத்துக்கொள்ளும்போது, அரசையும் காக்கிறோம் என்பதை மறந்துவிடாதீர்கள்.

அரசு என்பது மக்கள் இல்லாமல் இயங்கும் தனி இயந்திரம் அல்ல. நாமும் சேர்ந்ததுதான் அரசு. எனது தாழ்மையான வேண்டுகோள். நீங்கள் உங்களைப் பாதுகாக்க முற்பட்டால் அரசு பாதுகாக்கப்படும். அதைச் செய்யுங்கள். நீங்கள் செய்வீர்கள் என்று நான் நம்புகிறேன். நாளை நாம் இந்த கோவிட்-19 பரவலைத் தடுத்து வென்றபின் உலகம் பெருமை கொள்ளும்போது, அதில் ஒரு உன்னத இடம் சிங்கப்பூருக்கும் கிடைக்கும் என நான் நம்புகிறேன். இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஆர்வத்துடன் சிங்கப்பூர் அரசு செய்யும் என நான் நம்புகிறேன்".

இவ்வாறு கமல் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT