தமிழ் சினிமா

'மாஸ்டர்' கார்ட்டூனால் கோபமடைந்த மாளவிகா மோகனன்

செய்திப்பிரிவு

ரசிகர் வெளியிட்ட 'மாஸ்டர்' படக்குழுவினர் சம்பந்தப்பட்ட கார்ட்டூனால் மாளவிகா மோகனன் கோபமடைந்துள்ளார்.

மலையாளத்தில் அறிமுகமானாலும், தமிழில் ரஜினி நடித்த 'பேட்ட' படத்தின் மூலம் அறியப்பட்டவர் மாளவிகா மோகனன். அந்தப் படத்தில் சசிகுமாருக்கு மனைவியாக நடித்திருப்பார். அதற்கு வரவேற்பு கிடைக்கவே தொடர்ச்சியாக பல்வேறு பட வாய்ப்புகள் வந்தன.

இறுதியாக, விஜய் நடித்துள்ள 'மாஸ்டர்' படத்தில் நாயகியாக நடித்துள்ளார். இந்தப் படம் இன்னும் வெளியாகவில்லை. மேலும், இவர் சமூக வலைதளத்தில் மிகவும் பிரபலம். இவரது போட்டோ ஷூட் புகைப்படங்களுக்கு ஒரு ரசிகர் கூட்டமே இருக்கிறது.

'மாஸ்டர்' படம் குறித்து ரசிகர் ஒரு கார்ட்டூனை ட்விட்டர் பதிவில் வெளியிட்டார். அதில் 'மாஸ்டர்' குழுவினர் ஊரடங்கில் என்ன செய்து கொண்டிருப்பார்கள் என்று குறிப்பிட்டு, ஒவ்வொரு நடிகரும் வீட்டிற்குள் என்ன செய்து கொண்டிருப்பார்கள் என்பதை வரைந்திருந்தார். அதில் மாளவிகா மோகன் சமைப்பது போன்று வடிவமைத்திருந்தார்.

இந்த கார்ட்டூனுக்கு மாளவிகா மோகனன் தனது ட்விட்டர் பதிவில், "ஒரு கற்பனையான (சினிமா கதாபாத்திரங்கள் இருக்கும்) வீட்டில் கூட, பெண்ணின் வேலை என்பது சமையல் செய்வது தானா? எப்போது இது போன்ற பாலினப் பாகுபாடு சாகும்?" என்று குறிப்பிட்டார்.

உடனே ரசிகர்கள் பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவே, ட்வீட்டை நீக்கிவிட்டார். ஆனால், அதை ஸ்கிரீன் ஷாட்டாக வைத்துக் கொண்டு பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

தனது ட்வீட்டை மாளவிகா மோகனன் நீக்கியிருப்பது தொடர்பாக சின்மயி, "ரசிகர்களால் உருவாக்கப்பட்ட ஒரு ஓவியத்தில், தனக்குப் பிடிக்காத வகையில் தன்னைச் சித்தரித்ததற்காக ஒரு தொழில்முறை நடிகை கேள்வி கேட்கிறார். அதற்கு அவரை வசைபாடி, அசிங்கமாகப் பேசி, துன்புறுத்தி, அந்த ட்வீட்டை நீக்க வைக்கிறார்கள். அந்த குறிப்பிட்ட பாலினப் பாகுபாடு காட்டும் ஓவியம் 1000 முறைகளுக்கு மேல் ரீட்வீட் செய்யப்படுகிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT