'வரனே அவஷ்யமுண்டு' படம் தொடர்பான சர்ச்சைக்கு, தேவையில்லாத வெறுப்பைப் பரப்புவதை நிறுத்துங்கள் என்று ரம்யா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அனூப் சத்யன் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்து, தயாரித்த படம் 'வரனே அவஷ்யமுண்டு'. பெரும் வரவேற்பு பெற்ற இந்தப் படத்தில் சுரேஷ் கோபி, ஷோபனா, துல்கர் சல்மான், கல்யாணி ப்ரியதர்ஷன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். சில நாட்களுக்கு முன்பு இந்தப் படம் டிஜிட்டலில் வெளியானது.
இதில் சுரேஷ் கோபி வளர்க்கும் நாய்க்கு பிரபாகரன் என்று பெயர் சூட்டிக் காட்சிப்படுத்தியது படக்குழு. இந்த காமெடிக் காட்சிகளை வைத்து இணையத்தில் தமிழ்ப் பயனர்கள் பலரும் 'வரனே அவஷ்யமுண்டு' படக்குழுவினரைக் கடுமையாகத் திட்டத் தொடங்கினார்கள். துல்கர் சல்மான் இதற்கு மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து துல்கர் சல்மான் தனது ட்விட்டர் பதிவில் ஒரு கடிதம் ஒன்றை வெளியிட்டார். அதில் தனது தரப்பு நியாயத்தை விளக்கி, அதற்கு மன்னிப்பும் கோரியிருந்தார்.
இது தொடர்பாக 'ஓகே கண்மணி' படத்தில் துல்கருடன் நடித்த ரம்யா தனது ட்விட்டர் பதிவில், "துல்கருக்கு நம் மீது பெரிய மரியாதையும், தான் சென்னைவாசி என்ற பிணைப்பும் உள்ளது.
அவரைப் பல நாட்களாகத் தெரியும் என்பதால் என்னால் கண்டிப்பாக இதைச் சொல்ல முடியும். நாம் (இப்படிப் பேசுவதை விட) மென்மையானவர்கள். எல்லாவற்றையும் அப்படியே புரிந்துகொள்ள வேண்டியதில்லை. தயவுசெய்து தேவையில்லாத வெறுப்பைப் பரப்புவதை நிறுத்துங்கள்" என்று தெரிவித்துள்ளார்.
ரம்யாவுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக துல்கர் சல்மான், "மிக்க நன்றி அன்பே அனன்யா. நீங்கள் குறிப்பிட்டிருக்கும் விஷயத்தினால் தான் இது என்னை அதிகமாகப் பாதிக்கிறது என்று நினைக்கிறேன்" என்று கூறியுள்ளார்.
இறுதியாக ரம்யா, "நீங்கள் செய்யாத தவறுக்கு குற்றம் சுமத்தப்படுவதைப் பார்ப்பது வேதனையாக இருக்கிறது ஆதி. இதுவும் கடந்து போகும். பொறுமையாக இருங்கள்" என்று தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.