'மாஸ்டர்' எப்போது வெளியானாலும் கொண்டாட்டம்தான் என்று இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மாஸ்டர்'. ஏப்ரல் 9-ம் தேதி வெளியாகியிருக்க வேண்டிய இப்படம் கரோனா ஊரடங்கால் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தற்போது படத்தின் பணிகள் அனைத்தையும் முடித்து வெளியீட்டுக்குத் தயாராக வைத்துள்ளது படக்குழு.
இதுவரை ட்விட்டர் தளத்தில் மட்டுமே இயங்கிக் கொண்டிருந்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ், இன்று (ஏப்ரல் 26) இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இணைந்தார். மேலும், மாலை 6 மணியளவில் பட உருவாக்கம் குறித்த கலந்துரையாடல் ஒன்றில் நேரலையில் கலந்துகொண்டார்.
அந்தக் கலந்துரையாடலில் சிலர் 'மாஸ்டர்' குறித்த கேள்விகளை எழுப்பினர். அதற்குப் பதிலளிக்கும் விதமாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூறியதாவது:
"ஊரடங்கு முடியும்போதுதான் வெளியீட்டுத் தேதி குறித்துத் திட்டமிட வேண்டும். திரையரங்குகள் மீண்டும் திறக்கும் வரையில் காத்திருக்க வேண்டும். 20 நாள் தயாரிப்புப் பணிகள் உள்ளன. படத்தின் வெளியீட்டுத் தேதியைக் குறிப்பிட்டு படத்தின் ட்ரெய்லரை வெளியிடுவதே சரியான வழி. ’மாஸ்டர்’ எப்போது ரிலீஸ் ஆனாலும் அது ஒரு கொண்டாட்டமான படமாக இருக்கும் என்று உறுதியாகச் சொல்கிறேன்.
'மாஸ்டர்' ஒரு ஆக்ஷன் திரைப்படம். படத்தில் உள்ள ஆக்ஷன் காட்சிகள் சிறப்பானதாக இருக்கும். படத்தைப் பற்றிய அப்டேட் கொடுக்க இது சரியான தருணம் அல்ல. சில நாட்களுக்குக் காத்திருப்போம். இப்போதைக்குப் பாதுகாப்பாக இருப்போம். எனது இரண்டு படங்களின் பல காட்சிகள் இரவில் படமாக்கப்பட்டன. ஆனால், 'மாஸ்டர்' களம் வித்தியாசமானது. இதுவரை சத்யா ஒளிப்பதிவு செய்த படங்களில் 'மாஸ்டர்' தான் மிகச் சிறந்தது.
சென்னையில் 'மாஸ்டர்' படப்பிடிப்பின் தொடக்கத்தில் விஜய்யை சார் என்று அழைத்தேன். ஆனால், டெல்லி படப்பிடிப்பிலிருந்து அண்ணா என்று அழைக்கத் தொடங்கிவிட்டேன்".
இவ்வாறு லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.