பிறந்த நாள் கொண்டாட்டம் தொடர்பாக ரசிகர்களுக்கு அஜித் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித்துக்கு மே 1-ம் தேதி பிறந்த நாளாகும். அவர் ரசிகர் மன்றத்தைக் கலைத்துவிட்டார். எந்தவொரு சினிமா நிகழ்ச்சியிலும் பங்கேற்பதில்லை போன்றபல வரைமுறைகளுடன் வாழ்ந்து வருகிறார். ஆனால், வருடந்தோறும் அவருடைய பிறந்த நாளை அவரது ரசிகர்கள் வெகு விமரிசையாகக் கொண்டாடுவார்கள்.
இதற்காக சமூக வலைதளத்தில் சிறப்பான ஹேஷ்டேகுகளை உருவாக்கி இந்திய அளவில் ட்ரெண்ட் செய்வார்கள். மேலும், பிறந்த நாளுக்காக விஷேசமான போஸ்டர்கள் வடிவமைத்து, இதர பிரபலங்கள் மூலம் வெளியிட்டு அதை அனைத்து அஜித் ரசிகர்களின் ட்விட்டர் கணக்கிலும் இடம்பெறச் செய்வார்கள்.
இதற்கான முன்னேற்பாடுகள் இப்போதே ட்விட்டர் தளத்தில் நடைபெற்று வருகின்றன. சில பிரபலங்கள் மூலம் விஷேசமான போஸ்டர்கள் வெளியிடப்படும் என்ற அறிவிப்புகள் ட்விட்டர் தளத்தில் வெளியிடப்பட்டது. தற்போது அவ்வாறு வெளியிடும் பிரபலங்களுக்கு அஜித்தின் அலுவலகத்திலிருந்து தொலைபேசி வாயிலாக வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக நடிகர் ஆதவ் கண்ணதாசன் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
"அன்புள்ள தல ரசிகர்களே. அஜித் சாரின் அலுவலகத்திலிருந்து அழைப்பு வந்தது. அவரது பிறந்த நாளுக்கு எந்த பொது முகப்புப் படங்களையும் சமூக வலைதளங்களில் வைக்கவேண்டாம் என்றும், கரோனா காலத்தின்போது எந்தக் கொண்டாட்டத்திலும் ஈடுபட வேண்டாம் என்றும் அஜித் தனிப்பட்ட முறையில் விரும்புவதாக வேண்டுகோள் வைத்தார்கள்.
ஒரு ரசிகனாக, சக நடிகனாக, மனிதனாக அவரது வார்த்தைகளுக்கு மதிப்பு கொடுக்க விரும்புகிறேன். இதை நான் ட்வீட் செய்து விளக்கட்டுமா என்று கேட்டதற்கு தயவுசெய்து அவர்களிடம் சொல்லுங்கள் என்று கூறினார்கள். இந்தக் கடினமான சூழலில் அனைவருக்கும் நலமான வாழ்வு கிடைக்கப் பிரார்த்தனை செய்வோம். அஜித் கனிவுடன் நம்மிடம் வேண்டுகோள் விடுக்கிறார். எனவே அவரது வார்த்தைகளுக்கு மதிப்பு கொடுப்போம். உங்கள் அனைவருக்கும் நன்றி".
இவ்வாறு ஆதவ் கண்ணதாசன் தெரிவித்துள்ளார்.