சமூக ஊடகத்தில் அதிகாரம் வந்துவிட்டதாக உணர்கிறோம் என்று இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார்
இந்தியாவில் கரோனா அச்சுறுத்தலால் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் படப்பிடிப்பு எதுவுமே இல்லாமல் பிரபலங்கள் வீட்டிற்குள்ளேயே இருக்கிறார்கள். தற்போது நடிகை குல் பனாக், 'கூல் டெக்' என்ற தொடர் வீடியோ பேட்டிகளை எடுத்து வருகிறார்.
வீட்டிலிருந்து வேலை செய்பவர்கள், தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி எப்படி நேரத்தையும், உழைப்பையும் மிச்சப்படுத்தலாம் என்பது பற்றி பல்வேறு விருந்தினர்களிடம் கேட்டு வருகிறார். இதில் ஏ.ஆர்.ரஹ்மானும் பேட்டியளித்துள்ளார்.
இந்தப் பேட்டியில் புர்கா அணிந்து கொள்ள முடிவெடுத்துள்ள தனது மகள் கதீஜாவின் முடிவுக்கு ஆதரவு தெரிவித்திருந்தார் ஏ.ஆர்.ரஹ்மான். அவரது முடிவைப் பற்றி சமூக ஊடகங்களில் எழுந்த கேள்விக்கு கதீஜா அளித்திருந்த பதிலுக்கு ரஹ்மான் ஆதரவளித்திருந்தார்.
மேலும், தற்போதுள்ள சமூக ஊடக சூழலைப் பற்றிப் பேசும்போது ஏ.ஆ.ரஹ்மான், "நாம் ஒரு சிக்கலான சூழலில் இன்று இருக்கிறோம். சமூக ஊடகத்தில் நமக்குத் தனி உரிமை, அதிகாரம் வந்துவிட்டதாக உணர்கிறோம். ஆனால் அது நமக்குள் இருக்கும் அழகை வெளிக்காட்ட வேண்டுமே தவிர, வெறுப்பை அல்ல.
நான் எப்போது இணையத்தில் எதை எழுதுவதற்கு முன்பும் 'நான் சரியான காரணங்களுக்காகத் தான் இதைப் பதிவிடுகிறேனா? குடும்பத்துடன் நேரம் செலவழிப்பதை விட்டுவிட்டு மக்கள் இதைப் படிக்க வேண்டுமா?' என்றெல்லாம் என்னை நானே கேட்டுக்கொள்வேன். இந்த ஊரடங்கின் போதும் நான் எந்த வீடியோவிலும், உரையாடலிலும், இணையத்தில் இசை நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளவில்லை. இது உங்களது அன்பார்ந்தவர்களுடன் இருப்பதற்கான நேரம். இந்த விலைமதிப்பற்ற நேரத்தைக் கொண்டாட வேண்டும்" என்று ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார்.