தமிழ் சினிமா

நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு ரஜினி நிவாரண உதவி

செய்திப்பிரிவு

கரோனா ஊரடங்கினால் கஷ்டப்படும் நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு ரஜினி நிவாரண உதவி வழங்கியுள்ளார்.

இந்தியாவில் கரோனா அச்சுறுத்தலால் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு அமலில் இருக்கிறது. இதனால் எந்தவொரு பணியும் நடைபெறாமல், கடும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. படப்பிடிப்புகள் இல்லாத காரணத்தால் உதவி இயக்குநர்கள், துணை இயக்குநர்கள், தினசரித் தொழிலாளர்கள், தினசரி நடிகர்கள், நாடக நடிகர்கள் எனப் பலரும் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

பெப்சி தொழிலாளர்களுக்கு உதவ வேண்டும் என்று இயக்குநர் ஆர்.கே.செல்வமணி வேண்டுகோள் விடுத்தார். அப்போது பெப்சி தொழிலாளர்களுக்கு ரஜினி 50 லட்ச ரூபாய் நிதியுதவி அளித்தார். பிரதமர் நிவாரண நிதி, முதல்வர் நிவாரண நிதி ஆகியவற்றுக்கு நிதியுதவி அளிக்கவில்லை.

தற்போது இயக்குநர்கள் சங்கம், சின்னத்திரை கலைஞர்கள் சங்கம் என ஒவ்வொரு சங்கத்துக்கும் தனித்தனியாக நிவாரணப் பொருட்களை ரஜினி அனுப்பிவைத்து வருகிறார். ஒரு நபருக்கு 10 கிலோ அரிசி மூட்டை மற்றும் 6 கிலோ எடை கொண்ட மளிகைப் பொருட்கள் ஆகியவை அடங்கும். இதை ஒவ்வொரு சங்கத்துக்கும் 1500 பேருக்கு, 1000 பேருக்கு என அனுப்பி வைத்துள்ளார்

இதில் நடிகர் சங்கமும் அடங்கும். அங்கு கஷ்டப்படும் நடிகர்களுக்கு உதவும் வகையில் 1000 பேருக்கும் அனுப்பியிருக்கிறார். இது தொடர்பாக நடிகர் சங்கத்தின் தனி அலுவலர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

"உலகம்‌ முழுவதும்‌ கரோனோ வைரஸ்‌ பாதிப்பு காரணமாக இந்தியாவில்‌ ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால்‌ திரைப்படத்துறை சார்ந்த அனைத்துத் தொழிலாளர்கள்‌ வாழ்வாதாரம்‌ இன்றி மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்‌. இச்சூழ்நிலையில்‌ திரைப் பிரபலங்கள்‌ பலரும்‌ நிதியுதவி அளித்து வருகிறார்கள்‌. அவர்கள்‌ அனைவருக்கும்‌ நெஞ்சார்ந்த நன்றி.

இச்சூழ்நிலையில்‌, தென்னிந்திய நடிகர்‌ சங்கத்தின் 1000 உறுப்பினர்களுக்கு ரஜினிகாந்த்‌ நிவாரணப் பொருட்களை வழங்கியுள்ளார்‌. ரஜினிகாந்துக்கு தென்னிந்திய நடிகர்‌ சங்க உறுப்பினர்கள்‌ சார்பாக மிகுந்த நன்றியினையும்‌, பாராட்டுகளையும்‌ தெரிவித்துக் கொள்கிறேன்‌.

நிவாரணப் பொருட்களை 25.04.2020, 26.04.2020, 27.04.2020 ஆகிய மூன்று தினங்களில்‌ சாலிகிராமத்தில்‌ அமைந்துள்ள செந்தில்‌ ஸ்டுடியோ வளாகத்தில்‌ காலை 6 மணி முதல்‌ காலை 8 மணி வரை உறுப்பினர்கள்‌ தங்களுடைய தென்னிந்திய நடிகர்‌ சங்க அடையாள அட்டையுடன்‌ நேரில்‌ வருகை தந்து பெற்றுக்கொள்ளுமாறு அன்புடன்‌ கேட்டுக்கொள்கிறேன்‌".

இவ்வாறு தனி அலுவலர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT