திரையரங்குகள் அவ்வளவு சீக்கிரம் அழிந்துவிடாது என்று பத்திரிகையாளர்கள் மத்தியில் பேசும் போது கமல் குறிப்பிட்டார்
கரோனா தொடர்பான விழிப்புணர்வுக்காக, பல்வேறு பிரபலங்கள் விழிப்புணர்வுக்காக வீடியோக்கள், குறும்படங்கள், பாடல்கள் என வெளியிட்டு வருகிறார்கள். தற்போது கரோனா விழிப்புணர்வுக்காகப் பாடல் ஒன்றை எழுதி, இயக்கியுள்ளார் கமல்ஹாசன்.
'அறிவும் அன்பும்' என்று தலைப்பில் உருவாகியுள்ள அந்தப் பாடலை நேற்று (ஏப்ரல் 23) காலை யூ-டியூப் தளத்தில் வெளியிட்டார் கமல். இந்தப் பாடலை கமலுடன் இணைந்து யுவன், அனிருத், சித்தார்த் உள்ளிட்ட பல முன்னணி கலைஞர்கள் இணைந்து பாடியுள்ளனர்.
பாடலை வெளியிட்டவுடன், ஜூம் செயலி மூலம் பத்திரிகையாளர்களுடன் கலந்துரையாடினார் கமல். அப்போது இந்த ஊரடங்கில் திரையுலகில் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து அவர் பேசியதாவது:
"சினிமா அத்தியாவசியத் தேவை இல்லை. எனவே அதுவும் பல வியாபாரங்களைப் போல பாதிக்கப்படும். ஆனால் திரையரங்குகள் அவ்வளவு சீக்கிரம் அழிந்துவிடாது. நமக்குக் கூட்டம் கூடுவது பிடிக்கும். ஆனால் மாயாஜாலம் போல ஊரடங்கு முடிந்தவுடன் ஆரம்பித்துவிடக்கூடாது. மீண்டும் செயல்பட ஆரம்பிக்கும் முன் அரசும், மருத்துவர்களும் நமக்குச் சரியான அறிவுரை வழங்க வேண்டும்"
இவ்வாறு கமல் தெரிவித்தார்.
மேலும், ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளங்களின் வளர்ச்சி தொடர்பாக கமல் "சாட்டிலைட் சேனல்கள் வந்த நேரத்தில் அதை எதிர்த்த பெரும்பாலான இயக்குநர்கள் ஒரு கட்டத்தில் அந்த மாற்றத்தை ஏற்றுக் கொண்டு மாறினார்கள். 2013-ம் ஆண்டு 'விஸ்வரூபம்' படத்தை நேரடியாக வீடுகளுக்கு எடுத்துச் செல்ல நினைத்த போது அதற்கு எதிர்ப்புகள் எழுந்தன. ஆனால் தொழில்நுட்பத்துக்கு நன்றி, திரைப்படம் எடுப்பது எதிர்காலத்தில் ஜனநாயகமயமாகும், இன்னும் தனிப்பட்ட கலையாக, பிரம்மாண்டமாக அது மாறும்" என்று தெரிவித்துள்ளார் கமல்.